

அரபிக் கடலில் உள்ள லட்சத் தீவு பகுதியில் உருவாகியுள்ள மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ‘ஹெலன்’புயல், வெள்ளிக்கிழமை ஆந்திராவில் கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் ஓரளவு மட்டுமே மழை பெய்தது.
இந்நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் மலேசிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னையில் இருந்து 1000 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இந்தக் காற்றழுத்தத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பிறகே இது புயலாக மாறுமா என்பது தெரியவரும்.
சனிக்கிழமை காலை 8.30 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 6 செ.மீ., தூத்துக்குடி, குளச்சல், நாகர்கோவில், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் 3 செ.மீ, கிருஷ்ணகிரி மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், போளூர், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.