அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகன் கொலை: திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் மர்ம கும்பல் வெறிச்செயல்

அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகன் கொலை: திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் மர்ம கும்பல் வெறிச்செயல்
Updated on
1 min read

திருவள்ளூர் அருகே தமிழக பால்வளத் துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகன், பட்டப் பகலில் மர்ம கும்பலால் படு கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ரவி(45) என்பவர் தமிழக பால்வளத் துறை அமைச்சரான ரமணாவின் சித்தப்பா மகன் ஆவார். பெருமாள்பட்டுவில், ஹார்டுவேர்ஸ் கடையும் நிலம் வாங்கி விற்கும் தொழிலும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம், பெருமாள்பட்டு அருகே உள்ள கொட்டாம்பேடுவில் வாடிக்கை யாளர் ஒருவருக்கு தன் மோட்டார் சைக்கிளில் சிமென்ட் மூட்டைகளை அளித்துவிட்டு, கடைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பெருமாள்பட்டு ஊராட்சி அலுவலகம் அருகே, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 மோட்டார் சைக்கிள்களில் ரவியை பின்தொடர்ந்து வந்துள்ளது. அந்த கும்பல் ரவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டது.

தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், கொலை நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இதுகுறித்து, செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்ற னர்.

ரவிக்கு, கொலை செய்யும் அளவுக்கு பகைவர்கள் கிடை யாது என அவருக்கு நெருக்க மானவர்கள் தெரிவித்த னர். அதே நேரத்தில், பெருமாள் பட்டு அருகே உள்ள பொஜி கண்டிகை பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை அவர் வாங்கியுள்ளார். அந்நிலம் தொடர்பாக நீதி மன்றத்தில் நடந்த வழக்கில் தீர்ப்பு ரவிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதுகூட அவரது கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உட்பட வணிக சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமாள்பட்டுவில் திரண்டு, ரவியின் உடலை பார்த்து, கண்ணீர் விட்டனர். கொலை செய்யப்பட்ட ரவிக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

கொலை மிரட்டல் வந்துள்ளது

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம சிறுவன் ஒருவன் ரவியிடம் கடிதம் ஒன்றை அளித்துவிட்டு ஓடியுள்ளான். அதில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, செவ்வாய்ப்பேட்டை போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. அந்த புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால், ரவியின் படுகொலையைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in