

மதுரை நாடாளுமன்ற தேர்தலில் திருநங்கையான பாரதி கண்ணம்மா போட்டியிடுகிறார். எம்.பி தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையை சேர்ந்த பாரதி கண்ணம்மா (53) நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்துள்ளார். இவர்தான் இந்தியாவிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்று கூறப்படுகிறது. பாரதி கண்ணம்மா, மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை முடித்து, மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இது தவிர கணினி அறிவியலில் டிப்ளமோவும் பெற்றுள்ளார்.
மதுரையில் 2011-ல் மேயர் பதவிக்காக போட்டியிட முயன்ற போது சரியான ஆவணங்கள் இல்லாததால் அவரால் போட்டியிட முடியவில்லை. அப்போது அவரது வாக்காளர் அட்டையில் ஆண் என்றும் வேட்பு மனுவில் திருநங்கை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அனைத்து ஆவணங்களையும் திருநங்கை (other) என்று முறையாகப் பெற்று சுயேச்சையாக நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் நிற்க ஆர்வமுடன் தயாராகி வருகிறார் பாரதி கண்ணம்மா.
தனியார் வங்கியில் இரண்டு ஆண்டுகள் விற்பனை மேலாளராக இருந்த பாரதி கண்ணம்மா “திருநங்கைகளுக்கென்று குடும்பம் கிடையாது, எனவே ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் கிடையாது. நான் சுயேச்சையாக நிற்பதால் எந்த ஒரு தலைவரின் உத்தரவுகளுக்காகவும் காத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் ஜெயித்தால் திருநங்கைகளுக்கான கல்வியும், வேலை வாய்ப்பும் பெற கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன். பெண்களுக்கான உண்மையான உரிமைகள் கிடைக்கவும் வழி செய்வேன்” என்றார்.