

போரூரில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. டிசம்பருக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறினர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, குன்றத்தூர் நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் முக்கியமான சந்திப்பாக இருக்கிறது போரூர் ரவுண்டானா. வடபழனி, குன்றத்தூர், பூந்தமல்லி, கிண்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாகச் செல்கின்றன. போரூர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், இருபுறமும் தலா 7.5 மீட்டரில் சர்வீஸ் சாலையுடன், 480 மீட்டர் நீளம், 37.2 மீட்டர் அகலத்துக்கு ரூ.34.72 கோடியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. சென்னைப் பெருநகர நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த 2010 பிப்ரவரியில் பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.
இந்த வழியாக செம்பரம்பாக்கத்தில் இருந்து தென் சென்னைக்குச் செல்லும் பெரிய குடிநீர் குழாய்களை, வேறு வழிக்கு மாற்ற ரூ.5.5 கோடியில் பணிகள் நடந்ததால் மேம்பால கட்டுமானப்பணி திடீரென முடங்கியது. அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு சங்கங்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தியதை அடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், இப்போதும் ஆமை வேகத்தில் தான் பணிகள் நடக்கின்றன. இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகள் மேடு, பள்ளமாக இருப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. காற்றில் தூசி, புழுதி பறப்பதால், அப்பகுதியே புகைமூட்டம்போல மாறிவிடுகிறது.
மூச்சு திணறலால் பாதிப்பு
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘இங்கு மேம்பாலம் அமைப்பதாக கூறி, 5 தூண்கள் எழுப்பியதோடு சரி. அதன்பிறகு, 2 ஆண்டுகளாக எந்த வேலையும் நடக்கவில்லை. கடந்த ஆண்டு திடீரென மீண்டும் பணிகளை தொடங்கினர். தினமும் 15 பேர் வந்து, ஏதோ வேலை செய்கின்றனர். மற்றபடி, பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. மோசமான சாலைகளில் அதிக வாகனங்கள் செல்லும்போது தூசி, புழுதி பறக்கிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. பணியாளர் எண்ணிக்கையை அதிகரித்து இரவு பகலாக செயல்பட்டு, மேம்பாலப் பணியை விரைந்து முடிப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு’’ என்றனர்.
சிரமப்படும் வாகன ஓட்டிகள்
இதுதொடர்பாக சில வாகன ஓட்டிகளிடம் கேட்டபோது, ‘‘அண்ணா சாலையில்கூட சில நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதைக் காண முடியும். ஆனால், போரூர் சிக்னலில் எப்போதும் கனரக வாகனங்கள், கார்கள், பேருந்துகள் சென்றுகொண்டே இருப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலையில் இந்த சிக்னலை கடந்து செல்ல குறைந்தபட்சம் 20 நிமிடம் ஆகிவிடுகிறது’’ என்றனர்.
போக்குவரத்து போலீஸார் கூறும்போது, ‘‘மேம்பாலப் பணிகள், அதிக போக்குவரத்து காரணமாக, இந்த சந்திப்பில் எப்போதும் 6 போக்குவரத்து போலீஸார் நியமிக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்குமாறு நெடுஞ்சாலைத் துறையினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’’ என்றனர்.
டிசம்பரில் முடிக்க திட்டம்
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நிலம் கையகப்படுத்துவது மற்றும் இங்குள்ள குடிநீர் இணைப்பு குழாய்களை மாற்று பாதையில் கொண்டு செல்வது ஆகியவற்றால்தான் மேம்பாலப் பணியில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகின்றன. மேம்பாலப் பணி என்பதால் பாதுகாப்பு விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. டிசம்பருக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.