

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசியதாவது:
நெடுவாசல் போராட்டக் களத் துக்கு நாளை நானும் சட்ட மன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் செல்கி றோம். அங்குள்ள மக்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு தேவைப்பட்டால் இப்போராட் டத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் அறப்போராட்டத்தில் ஈடுபடும். இப்போராட்டம் தொடர்பாக புதுக் கோட்டை மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் முழு ஆதரவு தெரிவிக்கும்.
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இருந்த நெல் ஜெயரா மன் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அதற்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும். அவருக்கு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
டெல்லியில் காங்கிரஸ் தலை வர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தபோது என்னைப் பற்றி அவர் குற்றம் சாட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் எந்தவித உண்மையும் இல்லை. கட்சித் தலைமை என்னிடம் எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை. கட்சித் தலைமையில் இருந்து எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படும்போது மாவட்ட நிர்வாகிகளும் மாற்றப்படுவர். அது போல தேவைப்படும் நேரத்தில் அந்த மாற்றத்தைச் செய்வேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து என்னை விமர்சித்து வருகிறார். அவருக்குப் பதில் சொல்லவோ, அவரைப் பற்றி பேச வோ விரும்பவில்லை. அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்றார்.