

இருளர் பழங்குடி பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து 29-ம் தேதி கலவையில் போராட்டம் நடத்த தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேலூர் மாவட்டம் கலவை பகுதியில் உள்ள மாந்தாங்கல் கிராமத்தில் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண்ணையும், அவரது கணவர் செல்லப்பனையும் போலீஸார் கடந்த 24-ம் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இரவு 2 மணிக்கு ஆட்டோவில் திரும்பிய பரமேஸ்வரியும் செல்லப்பனும் கடுமையாக தாக்கப்பட்டிருந்தனர். பரமேஸ்வரி அவரது கணவரின் முன்னிலையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை மற்றும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து வரும் 29-ம் தேதி கலவையில் போராட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.