

திண்டிவனம் அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வைரம்புரத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவர் மகன் கேசவன் (23). அதே கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் (22) என்பவரை ஒரு தலையாய் காதலித்து வந்தார். மேலும் கேசவன் குடும்பத்தினர் பெண் கேட்டபோது, தகராறு உருவாகி இரு குடும்பத்துக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. கடந்த ஜூலை 7ம் தேதி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். அதில், கேசவன் மீது நடந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக வெள்ளிமேடு பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து நாகம்மாளின் சகோதரர்கள் சேட்டு, ராமதாஸ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 5 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊரான வைரபுரத்துக்கு நாகம்மாளின் குடும்பத்தினர் வந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, போலீஸார் விரைந்து வந்து நாகம்மாள், அவரது தந்தை எல்லப்பன், தாயார் குப்பு, சகோதரி வெண்ணிலா, அவரது கணவர் குப்பன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.