

# சுனாமிக்குப் பிறகு, மீனவர்களின் குடியிருப்புகள் கடற்கரையை விட்டு நீண்ட தூரம் இடம்பெயர்ந்துவிட்டன. 2011-ம் ஆண்டு கடற்கரை ஒழுங்கு மண்டல அறிவிப்பு ஆணை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடற்கரை மீனவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டுகின்றனர் மீனவர்கள்.
கடற்கரைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க அரசு திட்டமிடுகிறது என்று மீனவர் அமைப்புகள் சந்தேகம் கிளப்புகின்றன. இதற்குப் பதில் சொல்லும் பொறுப்பு, வரப்போகிற நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கிறது.
# தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓர் அனல்மின் நிலையம் இயங்குகிறது. மேலும், 12 அனல்மின் நிலையங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓர் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சூடான கழிவுநீராலேயே கடல் வளம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 அனல்மின் நிலையங்கள் செயல்படத் தொடங்கினால், மீன்வர்களின் மொத்த வாழ்வாதாரமும் அழிந்துபோகும் என்று மீனவர்கள் அஞ்சுகின்றனர்.
# நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை தூர்வாரி மேம்படுத்த மாநில அரசு 38 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 2013-ம் ஆண்டு பணிகள் முடிவடையும் என்று சொல்லப்பட்ட நிலையில், பாதிப் பணிகள்கூட முடியவில்லை. இதனால், துறைமுகத்தில் கடும் நெரிசல் நிலவுகிறது. அலையின் சீற்றத்தால் கடந்த சில மாதங்களாக அடிக்கடி படகுகள் கடலில் கவிழ்ந்துவிடுகின்றன என்று வருத்தப்படுகிறார்கள் இந்தப் பகுதி மக்கள்.
# இந்தப் பகுதியில் பசுமை மாறாக் கப்பல் அணையும் தளம் 380 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்று மாநில அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அது என்ன ஆனது என்று தெரியவில்லை என்கிறார்கள் மீனவர்கள்.
# திருவாரூர், நன்னிலம், கீழ்வேளூர் ஆகிய ஊர்களில் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லை. மைசூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சை - நாகப்பட்டினம் வரை 87 கி.மீ தொலைவுக்குச் சாலை படுமோசமாக இருக்கிறது. ஒன்றரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய பேருந்துகளை மூன்றரை மணி நேரம் உருட்ட வேண்டியிருக்கிறது.
# ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் பராமரிக்கப்படவில்லை. ஆக்கிரமிப்புகள், தரமற்ற கட்டுமானங்கள், நீர்த்தேக்கங்களின் பழுதுகள் என்று நீர் மேலாண்மை முற்றிலுமாக நாசப்பட்டிருக்கிறது. ஒருபக்கம் கடைமடை வரை நீர் போய்ச் சேராமல் வறட்சியால் கண்ணீர் விடுகிறார்கள் விவசாயிகள். மழைக் காலங்களிலோ வெள்ளம் பயிர்களை அழிக்கிறது.
# மானாவாரிச் சாகுபடிப் பரப்பு தொகுதிக்குள் அதிகம். மழை இல்லாவிட்டால் பயன்படுமே என்று கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட ராட்சத பம்புசெட்டுகள் பல ஆண்டுகளாகச் செயல்படுவது இல்லை.
# திருவாரூரில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. அங்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேவை என்கிறார்கள் மக்கள். மேலும், திருவாரூரிலிருந்து சென்னைக்குப் பகலில் ரயில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கைகளில் ஒன்று.
# விவசாயத்துக்கான மதிப்புக்கூட்டு வேலைகளைச் செய்யவில்லை. உதாரணத்துக்கு, நெல் அரவைக்காகப் பல மாவட்டங்களுக்கும் அனுப்ப வேண்டியிருக்கிறது. இங்கேயே ஒரு நவீன ஆலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.
# தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க விவசாயத்தில் நவீன இயந்திரமயமாக்கல் நடைபெறவில்லை. நவீன இயந்திரங்கள் இல்லாமல் விவசாயத்தில் பழைய நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன. தொகுதியில் விளைபொருட்களைப் பாதுகாக்க நவீன பதப்படுத்தும் கிட்டங்கிகளை அமைக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்று.
# மீன் பொருள்களுக்கு மதிப்புக்கூட்டுத் தொழில்நுட்பங்கள், அதிநவீன கருவிகள், மீனவர் தொழில் மற்றும் உயிர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சர்வதேசக் கடல் எல்லையில் மீனவர்களுக்கு எச்சரிக்கைக் கருவிகளை அமைக்க வேண்டும். மீனவர்களுக்குக் கடற்படை மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
# கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்புக்காக சுற்றுச்சூழலைக் கெடுக்காத வகையிலான விவசாய மேம்பாடு சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.