

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு பேரவை விதியின்படியே நடைபெற்றது. அதில் விதிமீறல் எதுவும் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதில் மனுவுக்கு மு.க.ஸ்டாலின் தரப்பு வரும் 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பின் வீடியோ பதிவை மு.க.ஸ்டாலின் தரப்புக்கு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பிப்.18-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது அந்த தீர்மானத்தின் மீது ரகசிய வாக் கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி திமுக உறுப்பினர்கள் அமளி யில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதாக பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.
இதை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், பேரவையில் நம்பிக்கை வாக் கெடுப்பு நடத்துவதற்கு முன்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனை வரும் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற் றப்பட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர் களை வெளியேற்றிவிட்டு நிறை வேற்றப்பட்ட நம்பிக்கை வாக் கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு கொள்கை முடிவு எடுக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார். இதுபோல, சமூக நீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலுவும் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங் கிய முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டபடி, சட்டப்பேரவை யில் நடந்த நம்பிக்கை வாக் கெடுப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு காட்சிகள் அடங் கிய சி.டி. சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த பேரவை விதிகளில் இடமில்லை. பேரவைத் தலைவர் பி.தனபால் உயிருக்கு அச் சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால்தான் பேர வைத் தலைவர் உத்தரவின்பேரில் அவைக் காவலர்களால் அவர் கள் வெளியேற்றப்பட்டனர். பேர வையில் அமளி ஏற்பட்டபோதும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமைதியாகவே இருந்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரவைத் தலைவர் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது. பேரவை விதியின்படியே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் விதிமீறல் எதுவும் நடக்கவில்லை. எனவே, மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவைச் செயலாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதிடுகையில், “நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 67 பத்திரிகையாளர்கள் அங்கு இருந்தனர். அப்படி இருக்கும் போது நம்பிக்கை வாக்கெடுப் பின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவில் எப்படி திருத்தம் செய்ய முடியும். நாங்கள் எந்த திருத்தத் தையும் செய்யவில்லை” என்றார்.
மு.க.ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, “பேரவைச் செயலாள ரின் பதிலை ஏற்க இயலாது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வீடியோ பதிவை எங்களுக்கும் தர உத்தரவிட வேண்டும். அத்துடன் பேரவைச் செயலரின் பதில் மனுவுக்கு நாங்கள் பதிலளிக்க கால அவகாசம் தர வேண்டும்” என்று கோரினார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வீடியோ பதிவின் நகலை மு.க.ஸ்டாலின் தரப்புக்கு வழங்க உத்தரவிட்டனர். பேரவை செயலாளரின் பதில் மனுவுக்கு வரும் 17-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முன்னதாக இது சம்பந்தமாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனியின் மகன் ஆணழகன் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்று முறையிடப்பட்டது. அந்த வழக்கு விசாரணை வரும் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.