Published : 28 Oct 2013 11:04 PM
Last Updated : 28 Oct 2013 11:04 PM

சிறிய பேருந்து, அம்மா உணவகங்களில் விதிமீறல்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் அம்மா உணவகம் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்படவில்லை எனக் கூறி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தப் பொது நல வழக்கு தொடர்பாக, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், சென்னை மாநகராட்சி சார்பில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் உணவகம் என்று அழைக்கப்படுவதற்கு பதிலாக அம்மா உணவகம் என பெயர் சூட்டப்பட்டு, முதலமைச்சரின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. உணவுப் பாதுகாப்புக்கான அடிப்படை விதிகளை மீறி இந்த உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதேபோல் குடிநீர் பாட்டில்களிலும் முதலமைச்சரின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.அதோடு விதிமுறைகளை மீறி நடைபாதைகளிலும் குடிநீர் பாட்டில் விற்பனை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இது தவிர அரசு பஸ்களில் முதலமைச்சர் படத்துடன் அ.தி.மு.க.வின் சின்னமும் இடம்பெற்றுள்ளது.

ஆகவே, விதிமுறைகளுக்கு மாறாக நடைபாதைகள், பஸ் நிறுத்தங்களில் குடிநீர் பாட்டில் விற்பனை மையங்களைத் திறக்கக் கூடாது என்றும், முதலமைச்சரின் படம் மற்றும் ஆளும் கட்சியின் சின்னம் இடம்பெறக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு நான் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளேன்.

எனது கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ராமசாமி தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.அக்னி ஹோத்ரி, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x