Published : 11 Oct 2014 02:41 PM
Last Updated : 11 Oct 2014 02:41 PM

பொம்மை அரசாக செயல்படாதீர்: போனஸ் பிரச்சினையை முன்வைத்து விஜயகாந்த் அறிவுறுத்தல்

தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி உண்மையான அரசாக செயல்பட வேண்டுமே தவிர, பொம்மை அரசாக செயல்படக் கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு முற்றிலும் செயலிழந்த அரசாக செயல்பட்டு வருகிறது. அமைச்சர்கள் அனைவரும் கோட்டையை காலிசெய்து, சென்னைக்கும் பெங்களூருக்கும் செல்வதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். எனவே தான் மக்கள் நடமாட்டமே இல்லாத கோட்டையில் சாரைப்பாம்புகள் உலா வந்தவண்ணம் உள்ளதோ என்று மக்கள் எண்ணுகிறார்கள்.

எனவே ஒரு நல்ல அரசுக்கு இலக்கணம், தமிழ்நாட்டில் வாழும் ஏழரை கோடி மக்கள் மீது கவனம் செலுத்துவதை விட்டு, ஒரு தனி நபர் மீது கவனம் செலுத்துவது எந்தவகையிலும் ஏற்று கொள்ளகூடியதல்ல.

அதற்கு உதாரணமாக தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் அரசு பொதுத்துறை நிறுவனங்களிலும், கூட்டுறவு ஆலைகளிலும் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு 2013 - 2014 ஆம் ஆண்டுக்கான போனஸ் இன்னும் வழங்கப்படவில்லை.

மின்வாரியத்தை தவிர வேறு எந்த ஒரு நிறுவனத்தையும் போனஸ் பற்றிய பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை, இது மிகவும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி மற்றொன்று பொங்கல். எனவே மிக முக்கிய பண்டிகையான தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியோடும், தங்கள் குடும்பங்களோடும் கொண்டாடும் வண்ணம் இந்த அரசு மேலும் தாமதிக்காமல் உடனே சம்மந்தப்பட்ட தொழிற் சங்கங்களை அழைத்துப் பேசி, இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும்.

உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்பது போல தமிழக மக்கள் ஒருபுறம் புறம் விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் நிலை உள்ளது. மற்றொரு புறம் பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என அனைத்து அத்தியாவசிய பொருட்களும், விலை உயர்வு என்ற நிலை நீடிப்பதால், செய்வதறியாது மக்கள் திட்டமிட்டு தங்கள் குடும்பங்களை நடத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அதே போல் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள சொர்ணகாளீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எரிந்த சம்பவத்திற்கு மக்கள் கண்டனத்தை தெரிவித்தும், போராட்டத்தை நடத்தியும், இந்த அசம்பாவிதத்திற்கு காரணமாக உள்ளவர்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் படி ஊர்மக்கள் புகார் கொடுத்துள்ளார்கள்.

காவல் துறையினர் வெறும் கண்துடைப்புக்காக இரண்டு பேரை மட்டும் கைது செய்துள்ளார்கள். மற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? பாதிப்புக்கு உள்ளான அந்த கோபுரத்தை அரசே சீரமைத்து தரவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்.

எனவே இந்த அரசு, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி உண்மையான அரசாக செயல்பட வேண்டுமே தவிர, பொம்மை அரசாக செயல்படக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x