தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: அன்புமணி கோரிக்கை

தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: அன்புமணி கோரிக்கை
Updated on
1 min read

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவாரூர் மாவட்டம் சோத்திரியம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவசாயி நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்பதை அறிந்து பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பருத்திப் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டதாலும், கடன் தொல்லையாலும் தான் இம் முடிவுக்கு அவர் தள்ளப்பட்டார் என்பது தமிழக விவசாயிகளின் அவலநிலையை விளக்கும் வேதனையான உண்மையாகும். அவர் வயிற்று வலியால் தற்கொலை செய்துக் கொண்டதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடன் தொல்லையால் இனியும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளாத அளவுக்கு பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு, உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயி ராஜேந்திரனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in