மத்திய வீட்டு வசதி கழகத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

மத்திய வீட்டு வசதி கழகத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை நுகர்வோர் (தெற்கு)நீதிமன்றத்தில் டி.யோகாநந்தம் என்பவர் மத்திய அரசு பணியாளர் வீட்டு வசதி கழகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

மத்திய அரசு பணியாளர் வீட்டு வசதி கழகம் சார்பாக 1998-ம் ஆண்டு ஆயிரம் சதுர நிலப்பரப்பில் பிள்ளையார்பட்டி என்ற மனைப் பிரிவில் வீடு கட்டித் தரப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதற்காக நான் மொத்தம் ரூ. 95,040 செலுத்தினேன். ஆனால் கடந்த 2005-ம் ஆண்டு வரை வீடு கட்டித் தரப்படவில்லை.

பின்னர் 2006 -ம் ஆண்டு பிள்ளையார்பட்டி மனை பிரிவில் வீடு கட்டி தரும் திட்டம் கைவிடப்பட்டது என எந்தவித முன் அறிவிப்பின்றி தெரிவித்தனர்.

இந்த வீட்டு மனைக்காக நான் செலுத்திய ரூ, 95,040 பணத்தையும் அவர்கள் திரும்ப ஒப்படைக்கவில்லை. இது சம்பந்தமாக அனுப்பப்பட்ட சட்ட அறிக்கைக்கும் பதில் வழங்கவில்லை. இவ்வாறு அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை நுகர்வோர் (தெற்கு) நீதிமன்றத்தின் தலைவர் டி. கிருஷ்ணராஜன்,உறுப்பினர் கே. அமலா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் புகார்தாரர் டி. யோகாநாதன் மத்திய பணியாளர் வீட்டு வசதி கழகத்தில் வீடு வாங்குவதற்காக ரூ.95,040 செலுத்தி இருக்கிறார் என்பது இருதரப்பு வாதங்கள் மூலம் அறியப்படுகிறது. கழகத்தினர் டிடீசிபி அனுமதி பெறுவதற்கு முன்பே வீட்டு மனைக்கான தொகையை புகார்தாரரிடம் இருந்து பெற்றுள்ளனர்.

அதன் பின்பு வீடு கட்டும் திட்டதை ரத்து செய்துள்ளனர் என்பது உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மனுதாரர் செலுத்திய ரூ. 95,040 தொகை செலுத்திய 2001 ம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியுடனும், வழக்கு செலவாக ரூ. 5 ஆயிரத்தையும் மத்திய பணியாளர் வீட்டு வசதி கழகத்தினர் ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in