

போக்குவரத்து சார்பு ஆய்வாளரை உருட்டுக்கட்டை யால் அடித்துக் கொலை செய்த ரவுடிக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு போக்குவரத்து சார்பு ஆய்வாளர் கதிரேசன் பணியில் இருந்தபோது அப்பகுதியில் ரவுடி வீரமுத்து சிலருடன் அடிதடியில் ஈடுபட்டார். சண்டையை விலக்கி விட்ட சார்பு ஆய்வாளர் கதிரேசன், வீரமுத்துவை எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் ஆத்திர மடைந்த வீரமுத்து, கதிரேசனை உருட்டுக் கட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த கதிரேசன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் வீரமுத்துவுக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து வீரமுத்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து மற்றும் வி.பாரதிதாசன் ஆகியோர் அடங் கிய அமர்வு, ரவுடி வீரமுத்துவுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர். மேலும் கொலை செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் கதிரேசன் குடும்பத்துக்கு இழப்பீ டாக ரூ.3 லட்சத்தை தமிழக அரசு வழங்கவும் உத்தரவிட்டனர்.