

பழவேற்காட்டில் உள்ள கலங்கரை விளக்கம் பொது மக்கள் பார்வைக்காக மீண்டும் வெள்ளிக்கிழமையன்று திறக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது பழவேற்காடு. வரலாற்று சிறப்புமிக்க இந்தப் பகுதியில் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் வணிக நோக்கத்துக்காக வந்து குடியேறினர். 1859-ம் ஆண்டு பழ வேற்காடு பகுதி கடற்கரையில் கலங்கரை விளக்கம் நிறுவப்பட்டது.
அதன் பிறகு, கடல் உப்புக் காற்றினால் சேதம் அடைந்த கலங்கரை விளக்கத்தை 1926-ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஆலன்சிவின்சன் புதுப்பித்தார். இந்நிலையில், 1985-ம் ஆண்டு கலங்கரை விளக்கம் பழுதடைந்த தையடுத்து 53 மீட்டர் உயரத்துக்கு அது மீண்டும் புதிதாக அமைக்கப் பட்டது.
இதில், பொருத்தப்பட்ட விளக்கு 26 மைல் சுற்றளவுக்கு ஒளி வீசும் தன்மை கொண்டதாக விளங்கி வந்தது. சுற்றுலாப் பயணிகள் படகுகள் மூலம் லைட் அவுஸ் குப்பம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தைப் பார்த்து ரசித்து வந்தனர்.
கடந்த 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து, தீவிர வாதிகளின் அச்சுறுத்தலால், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பல ஆண்டு களுக்குப் பின்னர் பழவேற்காடு லைட் அவுஸ் குப்பத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வைக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
தினந்தோறும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். பழவேற்காடு ஏரியின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளதால், சாலை வழியாக கலங்கரை விளக்கத்துக்குச் சென்று பார்வை யிடலாம். சிறுவர்களுக்கு ரூ.5ம், பெரியவர்களுக்கு ரூ.10ம் கட்டண மாக வசூலிக்கப்படுகிறது.