நெருக்கடிகளுக்கு இடையே ஓராண்டை நிறைவு செய்தது அதிமுக அரசு: எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி - மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

நெருக்கடிகளுக்கு இடையே ஓராண்டை நிறைவு செய்தது அதிமுக அரசு: எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி - மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை
Updated on
2 min read

கடும் நெருக்கடிகளுக்கு இடையே அதிமுக அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. எம்எல்ஏக்கள் கூட் டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மே 23-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அன்றிரவே ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்.

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் திடீரென போர்க்கொடி உயர்த்தி யதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதையடுத்து, கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல்வராக கே.பழனிசாமி பொறுப் பேற்றார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பாண்டிய ராஜன் ஓபிஎஸ் அணிக்கு சென்ற தால் அவருக்கு பதிலாக கே.ஏ.செங் கோட்டையன் அத்துறையின் அமைச்சரானார். மற்றபடி அமைச்சர வையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரன் கைது, அதிமுக இரு அணிகளை இணைக்கும் முயற்சி தோல்வி என தொடர் நெருக்கடிகளை முதல்வர் பழனிசாமி சந்தித்து வருகிறார்.

சசிகலா, தினகரன் இருவரும் சிறையில் இருப்பதால் அதிமுகவை யார் வழிநடத்துகிறார்கள் என்பதே தெரியாத நிலை உள்ளது. இதனால் அமைச்சர்கள் விருப்பம்போல செயல்படுகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் முதல்வர் சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தனி அணி திரளும் எம்எல்ஏக்கள்

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27-ம் தேதி பெரம்பலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் 28 தலித் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். முக்கிய அமைச்சர் பதவி உட்பட தலித்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் 13 எம்எல்ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுபோன்று அதிமுக எம்எல்ஏக்கள் தனித்தனியாக அணி திரள்வது முதல்வர் பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாச்சலம், பி.பழனியப்பன். வி.செந்தில் பாலாஜி உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் நேற்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்துப் பேசினர். மாலை வரை தலைமைச் செயலகத்திலேயே தங்கியிருந்த அவர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கூவத்தூரில் இருந்தபோது முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு அமைச்சர் பதவி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. எம்எல்ஏக்கள் எப்போது வேண்டுமானாலும் முதல்வர், அமைச்சர்களை சந்திக்கலாம். அவர்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்தனர். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. அமைச்சர் கள் தன்னிச்சையாக செயல்படு கின்றனர். அவர்களை எளிதில் சந்திக்க முடிவதில்லை. இதுபற்றி முதல்வரிடம் புகார் தெரிவித்தோம். எல்லோருடைய கருத்துகளையும் அறிய அதிமுக தலைமை அலுவலகத்தில் உடனடியாக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்’’ என்றார்.

முதல்வர் ஆலோசனை

இதைத் தொடர்ந்து நேற்று மாலை மக்களவை துணைத் தலை வர் மு.தம்பிதுரை, மூத்த அமைச்சர் கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார் உள்ளிட்டோருடன் முதல்வர் பழனிசாமி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவது, முன்னாள் அமைச்சர்கள் பலர் அமைச்சர் பதவி கேட்பது, எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்ட நெருக்கடி கொடுப்பது, பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்பு, மத்திய பாஜக அரசு கொடுக்கும் நெருக்கடி, குடியரசுத் தலைவர் தேர்தல், டிடிவி தினகரன் மீது புதிய வழக்கு, ரசிகர்களுடன் ரஜினி ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2016 மே 23-ம் தேதி பதவியேற்ற அதிமுக அரசு இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது. பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் இந்த ஓராண்டு நிறைவைக்கூட உற்சாகமாக கொண்டாட முடியாத நிலையில் முதல்வரும் அமைச்சர்களும் உள்ளனர்.

துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஜூன் 2-வது வாரத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அதிமுக எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தி பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர்களை முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in