

குமரி கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது காணாமல் போன மீனவர்களின் குடும்பத்துக்கு நிதியு தவியை ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்.
குமரி மாவட்ட மீனவர் குறை தீர்ப்புக் கூட்டம் நேற்று நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் நடந்தது. மீனவர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துறைவாரியாக பதில் அளிக்கப்பட்டது.
கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது காணாமல் போன, குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் குடும்பத்துக்கு மீனவர்குழு விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் மற்றும் மரணமடைந்த 4 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
புகார் அளித்தால் நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் எரிவாயு முகவர்களால் விநியோகிக்கப் படும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரசீதில் குறிப்பிட்டிருக்கும் கட்டணத்தை மட்டுமே நுகர்வோர் வழங்கவேண்டும்.
கூடுதலாக வழங்க வேண்டியதில்லை. இதுகுறித்து எரிவாயு நுகர்வோர் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
குறும்பனை பகுதியில் குழித்துறை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றி குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுகிறது. மார்த்தாண்டம், களியக்காவிளை வழித்தடத்தில் பயணிகளின் தேவைக்கேற்ப சர்குலர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
கருவேல மரங்கள் அகற்றம்
மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. கடற்கரை மேலாண்மை குழும பகுதிகளில் மேற்கூரை வரி தற்போது விதிக்கப்பட்டு வருகிறது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மீன்வளத்துறை துணை இயக்குநர் லேமக் ஜெயக்குமார், உதவி இயக்குனர் ரூபட் ஜோதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாயமான மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்
சவுதி அரேபியாவில் கடலில் விழுந்து பலியான இருவர் போக, மாயமான மற்றொருவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தை சேர்ந்த ஜோசப் சுகுந்தன், ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த நேபிள், கேசவன்புத்தன்துறையை சேர்ந்த ஜார்ஜ் உட்பட 4 பேர் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித்து வந்தனர்.
அவர்கள் கடந்த 18-ம் தேதி கடலுக்கு சென்றபோது சூறைகாற்றில் படகு கவிழ்ந்து 4 மீனவர்களும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். அவர்களை பிற படகுகளில் சென்ற மீனவர்களும், கடலோர காவல்படையினரும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குமரி மீனவர் 3 பேரும் தண்ணீரில் மூழ்கியதால் அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என கருதப்பட்டது.
ஜோசப் சுகுந்தனின் உடலை கடலோர காவல்படையினர் மீட்டனர். மறுதினம் கேசவன் புத்தன்துறையை சேர்ந்த ஜார்ஜின் உடலும் மீட்கப்பட்டது. இரு மீனவர்கள் இறந்ததாக உறுதி செய்யப்பட்ட நிலையில், நேபிளின் நிலை தெரியவரவில்லை. கடலோர காவல்படையினரும், மீனவர்களும் 8 படகுகளில் சென்று தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடலில் மூழ்கி பலியான ஜோசப் சுகுந்தன், ஜார்ஜ் ஆகியோரின் உடலை சொந்தஊர் கொண்டு வர நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மீனவ தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.