Published : 19 Aug 2016 11:41 AM
Last Updated : 19 Aug 2016 11:41 AM

சட்டப்பேரவை வளாகத்தில் ஸ்டாலின், துரைமுருகன் தலைமையில் திமுகவினர் போட்டி பேரவைக் கூட்டம்

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் திமுகவினர் போட்டி பேரவைக் கூட்டம் நடத்தினர். இதனால் பேரவை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் ஆகியோர் தலைமையில் போட்டி கூட்டம் நடைபெற்றது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 79 திமுக எம்.எல்.ஏக்களுடன் சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்எல்ஏக்களும் இந்தப் போட்டி பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் உறுப்பினர்களும் இந்த போட்டி பேரவையில் பங்கேற்றனர்.

ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என இரண்டு வரிசைகளாக பிரிக்கப்பட்டு கூட்டம் நடைபெற்றது. 1 மணி நேரம் இந்த போட்டி பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

துரைமுருகன் விளக்கம்:

போட்டி சட்டப்பேரவை கூட்டம் குறித்து விளக்கிய துரைமுருகன், "தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் தங்களது நியாயமான வாதங்களை முன்வைக்கக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழலில்தான் போட்டி கூட்டம் நடத்தும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டி கூட்டத்தின் மூலம் சட்டப்பேரவையில் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை திமுக உறுப்பினர்கள் தெரிவிப்பர். இந்த கூட்டத்தின் நோக்கம் அது மட்டுமே. மக்கள் பிரச்சினைகளை பேசுவதைத் தவிர யாரையும் கேலி செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும். கண்ணியத்துடன் கூட்டம் நடக்க வேண்டும். இப்போது நாம் நடத்தும் மாதிரி சட்டப்பேரவை கூட்டத்தை மக்கள் நேரலையில் காண்பர். திமுக ஆட்சி அடைந்தவுடன் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பப்படும்" என்றார்.

போட்டி அவையில் பேசப்பட்டது என்ன?

காவிரி பாசன விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசப்பட்டது. சென்னை வெள்ள பாதிப்புக்குப் பிறகும்கூட அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட மு.க.ஸ்டாலின், "திமுக ஆட்சி விரைவில் அமையும் அப்போது முதல் நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும்" என்றார்.

இன்னும் சில விவகாரங்களும் ஆலோசிக்கப்பட்டன. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் பேச முற்பட்ட போதெல்லாம் சபாநாயகராக நடித்துக் கொண்டிருந்த துரைமுருகன் வாய்ப்புகளை மறுத்தார்.

ஸ்டாலின் விளக்கம்:

போட்டி சட்டப்பேரவை கூட்டம் நடத்தியது குறித்து ஸ்டாலின் கூறும்போது, "சட்டப்பேரவை எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த மாதிரி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படும். சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து குரல் எழுப்பிய கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல்துறை மானியக் கோரிக்கை கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என திட்டமிட்டு எங்களை இடைநீக்கம் செய்திருக்கின்றனர்.

அடையாள தர்ணா, போட்டி பேரவைக் கூட்டம் வரிசையில் 22-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அடுத்தடுத்த நடவடிக்கை திமுக தலைவர் கருணாநிதியின் ஆலோசனையின்படி நடக்கும்" என்றார்.

தர்ணா, போட்டி பேரவை..

நேற்று முன் தினம் (புதன்கிழமை) சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் ஒரு வார காலத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பேரவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவை வளாகத்தில் திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு செல்லவிடாமல் சர்வாதிகார போக்கை கடைபிடிப்பதைக் கண்டித்து அடையாள தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) போட்டி பேரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x