

விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர், வேப்பூர், உளுந்தூர் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை 1.05 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்த கிராம மக்கள் நில அதிர்வை உணர்ந்து உடனே வீட்டை விட்டு வெளியேறி வீதியில் திரண்டனர். விடியும் வரை அப்பகுதியில் யாரும் வீட்டுக்குள் செல்லாமல் வீதியிலேயே இருந்தனர்.
இதேபோல் விருத்தாசலம் அடுத்த ஆலடி, எருமனூர், வடபாதி, மங்கலம்பேட்டை, திட்டக்குடி அடுத்த மேலவீதி, கோழியூர், ஆவினன்குடி, எறையூர், மாப்புடை யூர், சிறுமங்கலம், ராமநத்தம், சிறுபாக்கம், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பரவளூர் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் கூறும்போது, “வீட்டில் சமையலறை யில் இருந்த பாத்திரங்கள் திடீரென கீழே விழுந்தன. மேலும் உடலில் ஒருவித அதிர்வும் உணரப்பட்டது. வீட்டில் கட்டப்பட்டிருந்த மாடுகளும் மிரண்டன” என்றார்.
திட்டக்குடியில் உள்ள சிலர் கூறும்போது, தங்களது வீட்டில் கட்டில் ஆடியதாகவும், டிவி மீது வைத்திருந்த பொம்மைகள் கீழே விழுந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் சிலரது வீடுகளில் சுவரில் லேசாக விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
தகவலறிந்த விருத்தாசலம் கோட்டாட்சியர் செந்தில்குமார் மக்கள் பீதியில் இருந்த கிராமப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினர் மக்களிடம் சென்று அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்ட னர். போலீஸார் மற்றும் தீய ணைப்புப் படையினரும் உஷார் படுத்தப்பட்டனர். அதன் பின்னரே மக்கள் வீட்டுக்குள் சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, குன்னம், வேப்பூர், அகரம் சீகூர், மங்களமேடு, எறையூர், செட்டிக்குளம், பேரளி, சித்தளி, துறைமங்கலம், பெரம்பலூர் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. சில வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன. இதையடுத்து, பல வீடுகளில் இருந்தும் மக்கள் வெளியே வந்து, சாலைகளில் திரண்டனர். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் பொதுமக்கள் மீண்டும் வீடுகளுக்குள் சென்றனர். நில அதிர்வால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பெரிய அளவில் பொருட்களும் சேதமடையவில்லை.
இந்நிலையில் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங் களில் நில அதிர்வு ஏதும் உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.