

அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அமெரிக்காவின் ஃபுளோரி டாவில் உள்ள கிளிவ்லேண்ட் கிளினிக், லண்டனில் உள்ள யுனிவர் சிட்டி காலேஜ் ஆகியவற்றுடன் சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அமைந்துள்ள மலக் குடல் ஆய்வு சிகிச்சை மையம் ஒத்து ழைப்பு உடன்பாட்டை செய்து கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் சர்வதேச மலக்குடல் புற்றுநோய் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் உலகளவிலும், தேசிய அளவிலும் புகழ்பெற்ற மலக்குடல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொண்டனர். மலக்குடல் புற்றுநோய் மேலாண்மையின் நடப்பு போக்குகள், அறுவை சிகிச் சைக்கு முந்தைய கீமோ கதிரியக்க சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை யுக்திகள் குறித்து பங்கேற்பாளர்கள் அறிந்துகொண்டனர்.
மலக்குடல் புற்றுநோயால் உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.4 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். 6 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் இதனால் ஏற்படு கின்றன. இந்தியாவில் இளம் வயதினர் மத்தியில் இந்நோய் அதிகரித்து வருகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் இந்நோய் பாதிப்பு பரவலாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் கோலோ ரெக்டல் அறுவை சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறும்போது, “ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, துரித உணவுகளை உண்பது, சிவப்பு இறைச்சி உட்கொள்வது, புகைபிடிப்பது, மது அருந்துவது, மாசு போன்ற காரணங்களால் மலக்குடல்-பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும். மலக்குடல்-பெருங்குடல் புற்றுநோய் குறித்த தவறான கண்ணோட்டம் நிலவுகிறது. குதத்தில் ரத்தக்கசிவு, மலத்தில் ரத்தம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, உடல் எடை இழப்பு போன்றவை இதற்கான அறிகுறிகளாகும். அறிகுறிகள் 4 வாரங்கள் நீடிக்குமானால், சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல், ஆரம்ப நிலையி லேயே டாக்டரை அணுகுவது நல்லது” என்றார்.