

சென்னையில் சுமார் 80 லட்சம் பேர் வசிக்கின்றனர். பல ஊர்களில் இருந்தும் சென்னைக்கு தினமும் 20 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
இத்தனை பெரிய நகரில் தினந்தோறும் நடமாடும் பல லட்சக்கணக்கான மக்களை கருத்தில் கொண்டு, 600-க்கும் மேற்பட்ட இலவச பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆனால், பெரும்பாலான கழிப்பிடங்களில் காசு கொடுக்காமல் இலவச கழிப்பிடத்தைப் பயன்படுத்த முடியாத நிலைதான் இருக்கிறது. சிறுநீர் கழிக்க ரூ.1-ம், மலம் கழிக்க செல்ல ரூ.3-ம் வசூலிக்கிறார்கள். முக்கிய பகுதிகளில் இதற்கும் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. இப்படி கட்டணம் வசூலிக்கப்படுவது சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால், கண்டுகொள்வதில்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், கழிப்பிடங்களின் மொத்த பராமரிப்பையும் மாநகராட்சிதான் கவனிக்கிறது.
துடைப்பம், பினாயில், பிளிச்சீங் பவுடர் என எல்லாத்தையும் மாநாகராட்சி கொடுக்கிறது. சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடு த்தப்படுகின்றனர். கழிப்பிடம் அமைந்துள்ள கட்டிடம் பழுதடைந்தால் மாநகராட்சியே பழுதுநீக்கித் தருகிறது. மின்மோட்டாரும் அப்படியே.
லட்சக்கணக்கில் வசூல்
மெரினா கடற்கரையில் உள்ள மாநாகரட்சி இலவச பொது கழிப்பிடங்களையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 6 கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றை ஒரே நேரத்தில் 15 ஆண்கள், 15 பெண்கள் பயன்படுத்தலாம்.
இங்கு திங்கள், செவ்வாய் போன்ற வார நாட்களில் 3 ஆயிரம் பேர் கழிப்பறையைப் பயன்படுத்துகின்றனர்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால் 10 ஆயிரம் பேர் வரை கழிப்பறையை பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை. அப்போது மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். காணும் பொங்கலன்று கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும்.
கழிப்பிடங்களிலும் பெரிய கியூ நிற்கும். அன்றைய நாட்களில் கட்டண வசூல் ரூ.20 லட்சத்தை எட்டுமாம். இவ்வாறு கோடிக்கணக்கில் வசூல் நடப்பதாக கூறப்படுகிறது.
ஊடக ஆய்வாளர்
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரான கருப்பன் சித்தார்த்தன் இதுபற்றி கூறியதாவது:
சென்னை மாநகராட்சியின் 600 இலவச கழிப்பிடங்களை கட்டண வசூல் செய்வோரிடம் இருந்து மாநகராட்சி முழுமையாக மீட்டு, சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
இலவச கழிப்பிடங்களில் கட்டண வசூல் குறித்து, மாநகராட்சி நிர்வாகத்துக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் மனு கொடுத்துள்ளேன்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுக திட்டமிட்டுள்ளேன் என்றார்.