

திருவள்ளூர் மாவட்டத்தில் வார்தா புயலால் பாதிப்படைந்த நெற்பயிர்களில் 79,670 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப் பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித் துள்ளார். மேலும் மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக பயிறு வகை சாகுபடிக்கு மாறும்படி விவசாயிகளை ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந் தோறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்து வரு கிறது. நேற்று ஆட்சியர் சுந்தர வல்லி தலைமையில் நடந்த கூட்டத்தில், பேசிய விவசாயிகள் பலர் வார்தா புயலால் பாதிக் கப்பட்ட நெற்பயிர்கள் அனைத் துக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்கிற ரீதியில் அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை வைத்தனர்.
இதற்கு பதிலளித்து ஆட்சியர் பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் வார்தா புயலால் பாதிக்கப்பட்ட 79,670 ஏக்கர் நெற்பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்கப் பட்டுள்ளது. மேலும், வறட்சியால் பாதிக் கப்பட்ட 15,110 ஏக்கர் பரப்பள விலான நெற்பயிர்களை கணக் கெடுக்கும் பணி முடிவுற்று அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களை ஆய்வுசெய்து 2,417 ஏக்கர் பரப்பளவு பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வார்தா புயல் மற்றும் வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொண்டு மகசூல் கணிப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தில் அனைத்து அறுவடை மகசூல் விவரங்கள் பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்துக்கு அனுப்பி, உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பாசன நீர் பற்றக்குறை உள்ள கிராமங்களில் நெற்பயிருக்கு பதிலாக பயறு வகை பயிர்களை சாகுபடி செய்ய பரிந்துரை செய்யப்பட்டு சிறப்பு சலுகை தொகுப்பு மானியமாக 1 ஏக்கருக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் விதை உட்பட வேளாண் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
நீர் ஆதார நிலைகளை பாதுகாக்க குடி மராமத்து திட்டத்தின் கீழ் பணிகள், 2016-17-ம் நிதியாண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் 49 ஏரிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் முருகவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) சுரேஷ் ஜோ குமார் பிரைட், திருவள்ளூர், திருத்தணி, அம்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர்களான திவ்ய ஸ்ரீ, விமல்ராஜ், வீரப்பன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.