Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 12 Jan 2014 12:00 AM

அடகுக் கடை பெட்டகத்தை தூக்கும் ஹரிகிருஷ்ணன் கும்பல்: 7 மாவட்டங்களில் 50 கிலோ நகைகள் கொள்ளை

சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் செவ்வாய்க் கிழமையன்று நகை அடகுக் கடையில் பெட்டகத்தை தூக்கிக் கொண்டுபோன கொள்ளையர்கள், நகைகளை எடுத்துக்கொண்டு பெட்டகத்தை வயலில் வீசி விட்டுச் சென்றனர்.

இது தொடர்பாக போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் 22 பெட்டகக் கொள்ளை வழக்குகளில் இன்னமும் குற்றவாளிகள் சிக்காமல் இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

யாருக்கும் சந்தேகம் வராது

நள்ளிரவில் நகை அடகுக் கடை வாசலில் மினி லாரியை நிறுத்திக்கொண்டு, பூட்டை உடைத்து, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கடையின் அத்தனை லைட்டுகளையும் எரியவிட்டு, உரிமையோடு நகைப் பெட்டகத்தைப் பெயர்த்து எடுத்து மினிலாரியில் ஏற்றிக்கொண்டு கிளம்புவார்கள். நகைகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியே பெட்டகத்தை மட்டும் வீசிவிட்டு எஸ்கேப் ஆவார்கள். பதுங்காமல் பதறாமல் நடக்கும் இந்த நூதனக் கொள்ளையை யார் பார்த்தாலும் கடைக்காரர்கள் ஏதோ வேலை செய்வதாக நினைத்துக்கொண்டு பேசாமல்தான் இருப்பார்கள்.

பெட்டகக் கொள்ளையின் பிதாமகன்

பெட்டகக் கொள்ளைகளின் பிதாமகன் ஹரிகிருஷ்ணன் (இப்போது வயது 60). இவருக்குக் கீழே 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இருந்தது. ஏம்பல் முருகன், செல்வராஜ், வரதன், வர்க்கீஸ் செபஸ்டீன் இவர்கள் அதில் முக்கியமானவர்கள். 8 வருடங்களுக்கு முன்பு இவர்களின் அட்டகாசம் அதிகமானதால், பெட்டக கொள்ளையர்களைப் பிடிக்க மௌரியா எஸ்.பி. தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.

பல முனைகளில் துப்புத் துலக்கிய போலீஸ், விருது நகரில் தனது ஆசை நாயகி வீட்டில் ஒய்யாராமாகப் இருந்த ஹரிகிருஷ்ணனைச் சுற்றி வளைத்தபோது மட்டுமே 15 கிலோ நகைகள் சிக்கியது. சம்பாதித்த(!) நகைகளை ஆசைநாயகிக்கு அணிவித்து, மயங்கிக் கிடந்த ஹரிகிருஷ்ணன் தங்களிடம் சிக்கிய ’ரம்யத்தை இப்போது கேட்டாலும் சொல்லிச் சிரிக்கிறார்கள் சிவகங்கை க்ரைம் போலீஸார்.

சிஷ்யன் செல்வராஜ்

ஹரிகிருஷ்ணனை அடுத்து ஏம்பல் முருகன், செல்வராஜ் உள்ளிட்டவர்களும் போலீஸிடம் சிக்கியபோது ஹரிகிருஷ்ணன், முருகன் மீது கொலை வழக்குகள் நிலுவையில் இருந்ததால் வெளியே வரமுடியவில்லை. செல்வராஜ் உள்ளிட்டவர்கள் மட்டும் ஜாமீனில் வெளியில் வந்து பெட்டகக் கொள்ளையை தொடர்ந்தார்கள்.

22 சம்பவங்கள்: 50 கிலோ நகைக் கொள்ளை

செல்வராஜ் டீம் புதிய டெக்னிக்கை கையாண்டது. புல்லட்டில் உள்ள போக்ஸ் கம்பியை வைத்து பெட்டகங்களில் உள்ள லாக்கரை லாவகமாக நெம்பி, நகைகளை மட்டும் சுடுவார்கள். இந்தக் கும்பல் தலை யெடுத்த பிறகு, 7 மாவட்டங்களில் 22 இடங்களில் நகைப் பெட்டகக் கொள்ளை நடந்துள்ளன. இந்த 22 வழக்குகளிலும் இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை.

இதுவும் ஹரிகிருஷ்ணன் கும்பலின் கைவரிசைதான்

இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸார் ’தி இந்துவிடம் கூறியதாவது; ’’2012-ல் வள்ளியூர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட செல்வராஜ் இன்னமும் புழல் சிறையில் இருக்கிறான். ஆனால், ஹரிகிருஷ்ணன் 9 மாதங்களுக்கு முன்பு விடுதலையாகி இருக்கிறான். எனவே, சீர்காழி பெட்டகக் கொள்ளை ஹரி கிருஷ்ணன் கோஷ்டியின் கைவரிசையாகத்தான் இருக்க வேண்டும்.

நீலகிரி ஜெயராஜ் அண்மையில் ரிலீஸ்

ஹரிகிருஷ்ணன் டீமிலிருந்து பிரிந்த லெட்சுமணன் (எ) அர்ச்சுணன் சென்னையில் சிகரெட் கம்பெனி வேனை மறித்துக் கொள்ளையடித்த வழக்கில் புழல் சிறையில இருக்கிறான். இவனது கூட்டாளி நீலகிரி ஜெயராஜ் ஒரு மாதத்துக்கு முன்பு ஜெயிலிலிருந்து ரிலீஸாகி இருக்கிறான். இவர்கள் அத்தனை பேரும் எங்கேயோ பதுங்கி இருக்கிறார்கள். பெட்டகக் கொள்ளையில் இவர்களுக்கு வேன், லாரி எடுத்துக் கொடுப்பதற்கென்றே இருக்கும் ஒருவனை பிடிச்சுட்டா ஹரிகிருஷ்ணனை ஈஸியா பிடிச்சிடலாம்’ என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x