

அந்நிய செலாவணி மோசடி வழக் கில் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள தாக தெரிவித்தார். அதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 22-ம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.
பரணி பீச் ரிசார்ட் என்ற போலி நிறுவனம் மூலம் வெளிநாட்டி லிருந்து கடன் பெற்று கொட நாடு எஸ்டேட் பங்குகளை வாங் கியதாகவும், டிப்பர் இன்வெஸ்ட் மெண்ட் நிறுவனம் மூலம் இங்கி லாந்து வங்கியிலிருந்து சூப்பர் டூப்பர் டிவிக்கு ஒளிபரப்பு சாதனங் களை இறக்குமதி செய்ததாகவும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது கடந்த 1996-ம் ஆண்டு அமலாக்கப்பிரிவினர் 7 வழக்குகளைப் பதிவு செய் தனர்.
இந்த 7 வழக்குகளில் இருந் தும் தங்களை விடுவிக்கக் கோரி சசிகலா, டிடிவி தினகரன் உள் ளிட்டோர் மனு தாக்கல் செய் திருந்தனர். இதில் சசிகலா மீதான ஒரு வழக்கிலிருந்தும், தினகரன் மீதான 2 வழக்குகளிலிருந்தும், பாஸ்கரன் மீதான ஒரு வழக் கிலிருந்தும் அவர்களை விடுவித் தும், மற்ற வழக்குகளில் இருந்து விடுவிக்க மறுத்தும் எழும்பூர் நீதிமன்றம் கடந்த 2015-ல் உத்தரவிட்டது. எழும்பூர் நீதிமன் றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் இருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய் தும், வழக்கு விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டது.
இதன்படி அதிமுக துணைப் பொதுச் செயலாளரான டிடிவி.தினகரன் நேற்று எழும்பூர் பெரு நகர நீதிமன்ற கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் எஸ்.மலர்மதி முன்பு ஆஜரானார். அப்போது இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும், அதுவரை இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது எனவும் கோரினார். ஆனால் நீதிபதி எஸ்.மலர்மதி, “உச்ச நீதிமன்ற உத்தரவை பெற்ற பிறகு அதுகுறித்து முடிவு எடுக்கலாம். அதுவரை இந்த நீதிமன்றத்தி்ல் விசாரணை தொடரும்” எனக்கூறி விசாரணையை வரும் மார்ச் 22-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினமும் டிடிவி தினகரன் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.
அதன்பிறகு செய்தியாளர் களிடம் பேசிய டிடிவி தினகரன், ‘‘வரும் மார்ச் 22-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவேன். ஆர்.கே.நகர் தொகுதியில் குறைந் தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறு வேன்” என்றார்.