

மேற்கில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதாலும், கடல்காற்று தாமதமாக வீசுவதாலும் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் சற்று அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், ''மேற்கில் இருந்து வீசும் தரைக்காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதாலும், கடல்காற்று தாமதமாக வீசுவதாலும், மேகக்கூட்டம் குறைவாக இருப்பதாலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் இயல்பைவிட வெப்பம் சற்று அதிகமாக இருக்கும்'' என்றார்.
வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன்சுற்றுப்புறத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடிமேகங்கள் உருவாகக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.