Published : 21 Sep 2016 04:51 PM
Last Updated : 21 Sep 2016 04:51 PM

தமிழகத்தில் பத்திரப்பதிவு ஸ்தம்பித்ததால் அரசுக்கு ரூ.150 கோடி வரை இழப்பு

உயர் நீதிமன்ற இடைக்காலத் தடையால் அங்கீகாரமில்லாத மனைகள், நிலங்களை பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசுக்கு கடந்த ஒரு வாரமாக 150 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக விற்பனை செய்வதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப் பட்டது. இவ்வழக்கில் அங்கீகாரம் பெறாத மனைகளை விற்பனை செய்வத ற்கான பத்திரங்களை பதிவு செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் வீட்டுமனைகள், நிலங்கள் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பதிவுத் துறைக்கு சுமார் ரூ.150 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திமுக ஆட்சியில் பத்திரவுப் பதிவுத் துறை அமைச்சராக இருந்த இ.பெரியசாமி எம்எல்ஏ கூறியதாவது:

அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்யக்கூடாது என மத்திய அரசின் பதிவுச் சட்டத்தில் கூறப்படவில்லை. அது வாங்குபவர்கள், விற்பவர்களைப் பொறுத்தது. இருவரும் ஏற்றுக்கொண்டால் பரிவர்த்தனை செய்யலாம். இது குறித்து கேள்வி கேட்க பத்திரவுப் பதிவு அலுவலர்களுக்கு உரிமை இல்லை. பதிவுத் துறை தடுக்கக் கூடாது. இது தனி மனித உரிமையை தடுப்பது போன்றது.

மத்திய அரசின் பதிவுச் சட்டம் இவ்வாறு இருக்கும்போது இதில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்? என்று தெரியவில்லை. நகர்ப்புறங்களில் தான் அங்கீகார மனையா? என்று பார்த்து வாங்குகின்றனர். கிராமப்புறங்களில் இதுபோன்ற நடைமுறை இல்லை. ஒரு இடத்தை வாங்கிய பிறகு அதில் கட்டிடம் கட்டும்போது தான் கண்டிப்பாக அங்கீகாரம் வாங்க வேண்டும். அப்போது தான் கடன் வாங்கு வதற்கும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறவும் இந்த அங்கீகாரம் உதவும். இவர்கள் வீடு கட்டும்போது அங்கீகாரம் இல்லை எனத் தடுக்கலாம். இப்போது தடுக்க முடியாது. வணிக வரித் துறைக்கு அடுத்தபடியாக தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருவது பத்திரப் பதிவுத் துறை தான்.

தற்போதுள்ள அரசுக்கு டாஸ்மாக், வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை இந்த மூன்றும் தான் அதிக வருவாயை கொடுக்கிறது. இவ்வாறு இருக்கும்போது இந்த ஆட்சியாளர்கள் பத்திரப் பதிவுத் துறையில் வழிகாட்டுதல் மதிப்பை ஏற்கெனவே பன்மடங்கு உயர்த்தியதால் பத்திரங்கள் பதிவு குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டநிலையில், தற்போது ஒரு வாரமாக பதிவுகள் இல்லாதநிலையில் அரசுக்கு சுமார் ரூ.150 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பற்றாக்குறை நிதி நிலையால் ஏற்கெனவே திணறும் தமிழகத்துக்கு பத்திரப்பதிவுத் துறை வருமான இழப்பு என்பது பெறும் பின்னடைவு தான். இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x