Published : 28 Oct 2013 09:28 AM
Last Updated : 28 Oct 2013 09:28 AM

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: டெல்லியில் விஜயகாந்த் பேச்சு

தேர்தல் கூட்டணி குறித்துப் பேச நான் டெல்லிக்கு வரவில்லை என்ற விஜயகாந்த், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.



டெல்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை தேமுதிக நடத்திய பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் விஜயகாந்த் பேசினார்.

டெல்லி வாழ் தமிழர்களுக்கு வாக்காளர் அட்டை, சாதிச் சான்றிதழ், அடிப்படை வசதிகள் வேண்டும் எனக் கோரி தேமுதிக டெல்லியில் பொதுக்கூட்டம் நடத்தியது.

சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது, "என்னுடைய தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்காக நான் குரல் கொடுப்பேன். டெல்லியில் உள்ள தமிழர்களுக்கான பள்ளிகளில் 41 சதவிகித தமிழ்க் குழந்தைகள் மட்டுமே படிப்பது ஏன்? டெல்லித் தமிழர்கள் அதிகமாக குடிசைகளில் வசிப்பது ஏன்? அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படாதது ஏன்?

எனக்கு ஹிந்தியும் தெரியாது: ஆங்கிலமும் தெரியாது. திமுக, அதிமுக, சார்பில் 40 எம்பிக்கள் டெல்லி வருகிறார்கள். இவர்கள், டெல்லி வாழ் தமிழர்கள் பற்றிக் கவலைப்பட்டதில்லை. நான் குடிகாரன் அல்ல!

எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது எனக் கூறுகிறார்கள். மனிதனின் இயற்கை குணமான அதை என்னால் மறைக்க முடியவில்லை. சிலர் அவர்கள் செய்யும் தவறுகளை மறைத்து என் மீது பழியைப் போட, நான் குடித்து விட்டு மேடைகளில் பேசுகிறேன் எனக் கூறுகிறார்கள். ஆனால், நான் குடிப்பதில்லை" என்றார் விஜயகாந்த்.

காமன்வெல்த் மாநாடு காமன்வெல்த் மாநாடு பற்றிக் குறிப்பிட்ட விஜயகாந்த், "இம்மாநாட்டில் இந்தியா கலந்துகொண்டால், இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார். அங்கு இனப்படுகொலை நடக்கவில்லை: அதனால்தான் இந்தப் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒரு தோற்றம் உருவாகிவிடும்" என்றார்.

முன்னதாக, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பேசினார். டெல்லி சட்டசபை தேர்தலில் தேமுதிக போட்டியிடுவது குறித்து விஜயகாந்த் எதுவும் பேசவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x