Published : 05 Jul 2016 12:10 PM
Last Updated : 05 Jul 2016 12:10 PM

மழைக் காலங்களில் சாலைகள் துண்டிக்கப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் 3-வது மாற்றுப் பாதை: அரசின் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருமா?

பருவமழைக் கால நிலச்சரிவில் பிரதான சாலைகள் துண்டிக்கப்படுவதால், நீலகிரி மாவட்டத்தில் அரசு அறிவித்த 3-வது மாற்றுப் பாதை செயல்பாட்டுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு வர குன்னூர், கோத்தகிரி ஆகிய 2 பாதைகள் உள்ளன. இவை 100 ஆண்டுகளுக்கும் மேலாக, பிரதான சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பர்லியாறு சாலையில் எப்போதும் சுற்றுலா, சரக்கு உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தச் சாலையில், வடகிழக்கு பருவமழைக் காலங்களில் நிலச்சரிவு, பாலங்கள் சேதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இத்தகைய நேரங்களில், மாற்றுப் பாதையாக கோத்தகிரி சாலை உள்ளது. பல்வேறு வளைவுகள் நிறைந்த இந்தச் சாலை, பர்லியாறு சாலையை விட வலுவிழந்துள்ளது.

10 டன் எடைக்கு மேல் அதிகப்படியான வாகனங்கள் சென்றால், பல்வேறு இடங்களிலும் பாதிப்புகள் ஏற்படுமென, ஏற்கெனவே புவியியல் துறையினர் எச்சரித்துள்ளனர். அதேசமயம், சமவெளிப் பகுதிகளில் இருந்து சிறிய வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கினால், குன்னூர் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்.

3-வது பாதை

இந்நிலையில், காரமடையில் இருந்து வெள்ளியங்காடு வழியாக மஞ்சூருக்கு வர, கெத்தை - மஞ்சூர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் போக்குவரத்து மற்றும் இயற்கை இடர்பாடுகளை கருத்தில்கொண்டு, உதகையில் இருந்து மஞ்சூர், கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு காரமடை வழியாக கோவைக்கு 3-வது மாற்றுப் பாதை அமைக்கப்படுமென, 5 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அரசு அறிவித்தது.

ஏற்கெனவே, மஞ்சூர் - கோவை சாலையில் அரசுப் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு, குறிப்பிட்ட தூரம் வரையிலான சாலை, மின்வாரியம், வனம் மற்றும் நெடுஞ்சாலைச் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், 3-வது மாற்றுப் பாதைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தச் சாலையை விரிவுபடுத்தி சீரமைக்க, பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், 5 ஆண்டுகளாகியும் சாலை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

புதர்மண்டி குறுகிவிட்ட சாலை

3-வது மாற்றுப் பாதைத் திட்ட அறிவிப்பால், இந்தச் சாலையில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், மஞ்சூரில் இருந்து காரமடை வரை சுமார் 60 கி.மீ. சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது.

இந்த வழியாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவது வாடிக்கையாக உள்ளது.

3-வது மாற்றுப் பாதைத் திட்டத்தை செயல்படுத்தும் முன்பாக, குழிகள் மற்றும் பள்ளங்களை சீரமைத்து செடி, கொடிகளை வெட்டி அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x