5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: 43 ஆயிரம் மையங்கள் அமைப்பு

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: 43 ஆயிரம் மையங்கள் அமைப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம், 43 ஆயிரம் மையங்களில் இன்று நடக்கிறது.

மாநிலம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43,051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் பஸ், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில்1,652 மையங்கள் அமைக்கப்படுகின்றன.

நடமாடும் குழுக்கள்

தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் மற்றும் 3.000 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சாலை, மணலி நியூ டவுனில் உள்ள பிசி கல்யாண மண்டபத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

2-வது தவணை

இதுதொடர்பாக டாக்டர் க.குழந்தைசாமி கூறும்போது, ‘‘போலியோ சொட்டு மருந்து மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி ஓரிரு நாட்களுக்கு முன்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டி ருந்தாலும், முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது மிகவும் அவசியமாகும். இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in