செஞ்சி கோட்டையில் பாரம்பரிய தின கொண்டாட்டம்

செஞ்சி கோட்டையில் பாரம்பரிய தின கொண்டாட்டம்
Updated on
1 min read

நமது ஊர்களைச் சுற்றியிருக்கும் இயற்கை எழில் மிகுந்த பாரம்பரிய இடங்களும், கல்வெட்டுகளும், ஓவியங்களும், சிற்பங்களும் பற்பல வரலாறுகளை சுமந்து நிற்கின்றன. ஒவ்வொரு பாரம்பரியச் சின்னத்திற்குள்ளும் வீரம் சொரிந்த கதைகள் பொதிந்து கிடக்கின்றன. ஆனால், இந்தப் பாரம்பரிய சின்னங்கள் மீது நாம் அக்கறை செலுத்தாததால் பழங்கால சின்னங்களின் பெருமையை இழந்து வருகிறோம்.

1972-ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்களை பாதுகாப்பது குறித்தான மாநாட்டில் உலக பாரம்பரிய நாள் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப். 18-ம் தேதி (நேற்றைய தினம்) உலக பாரம்பரிய தினமாக கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்தது.

உலகில் சிறந்த கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியம் கொண்ட மரபுரிமை சின்னங்களை யுனெஸ்கோ அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. உலகம் முழுவதும் 936 இடங்கள், பண்பாட்டு சின்னங்களாக இந்த அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 725 கலாச்சார இடங்களாகவும், 183 இயற்கை பாரம்பரிய இடங்களாகவும், 28 இடங்கள் இரண்டும் சேர்ந்தகைகளாகவும் உள்ளன. உலகில் அதிக பாரம்பரிய சின்னங்கள் கொண்ட ஏழாவது நாடாக இந்தியா உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ராஜாதேசிங்கு ஆண்ட ராணி கோட்டையும், ராஜா கோட்டையும் பாரம்பரியத்தின் முக்கியச் சின்னங்கள். பாரம்பரிய தினத்தையொட்டி, செஞ்சி கோட்டையில் நேற்று கட்டணமில்லாமல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்தக் கோட்டையின் பெருமைகளை எடுத்துக் கூற கண்காட்சிகள் அமைத்து விவரிக்கலாம்; இங்குள்ள நினைவிடம், அரும் பொருளகம் (Monument) பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கலாம்; பாரம்பரியத்தை காப்பாற்றியவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கலாம்; .பள்ளி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் பாரம்பரிய நினைவு சின்னங்கள் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

ஆனால் இவை எதையும் செய்யாமல் கட்டணம் ஏதுமில்லாமல் நேற்று பார்வையாளர்களை கோட்டைக்கு அனுமதித்தோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக தொல்லியல்துறை எண்ணுகிறது. இதுகுறித்து செஞ்சி கோட்டையின் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொள்ள செஞ்சி கோட்டை அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, முதலில் தொலைபேசியை எடுத்தவர், 'கண்காணிப்பாளர் வெளியே சென்றுள்ளார்' என்றார். மீண்டும் தொடர்புகொண்ட போது டெல்லி சென்றுள்ளதாக கூறிவிட்டனர்.

நமது ஊர்களைச் சுற்றியுள்ள பாரம்பரிய கட்டிடங்கள், நினைவிடங்கள், கோயில்கள் பற்றி நம் சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் பெருங்கடமை நமக்கு இருக்கிறது. நாம் அதைச் செய்வோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in