

# அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு தினசரி சுமார் 60 ஆயிரம் பேர் செல்கிறார்கள். இந்த ரயில்களில் இடம் கிடைப்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. கழிப்பறைகளிலும் படிகளிலும் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்கிறார்கள். எனவே, கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க வேண்டும்.
# இரவு 9 மணிக்கு மேல் சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாகச் செல்லும் ரயில்கள் அரக்கோணத்தில் நிற்பதில்லை. சென்னையிலிருந்து அரக்கோணம் வரை மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைத் திட்டத்தை விரைவாக முடித்துக் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். திண்டிவனம் - நகரி ரயில் பாதைத் திட்டம் பாதியில் நிறுத்தப் பட்டுள்ளது. ரயில் பாதைத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணியைத் துரிதப்படுத்த வேண்டும்.
# சென்னையின் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தில், வேலூர் மாவட்டத்தையும் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இன்னும் 20 ஆண்டு கால வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
#அரக்கோணம் ரயில்வே பொறியியல் தொழிற் சாலையை விரிவாக்கம் செய்து, புதிய பணிகளை வழங்கிப் பலப்படுத்த வேண்டும். அரக்கோணம் புறவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் நிலம் அளிக்க வேண்டும்.
#அரக்கோணம், ராணிப்பேட்டை, சோளிங்கர், திருத்தணி பகுதிகளை ஒருங்கிணைத்து, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். இதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
# ராணிப்பேட்டை, வாலாஜா பகுதிகளில் பாலாறு ஆற்றுப் படுகை மாசடைவதைத் தடுக்கத் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ராணிப்பேட்டை சிப்காட்டில் மூடப்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
# தமிழகத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான காவேரிப்பாக்கம் ஏரியின் பரப்பளவு சுருங்கியும், தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசடைந்தும் வருகிறது. இதனால், ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலை மாசுக்களைத் தடுத்து, ஏரியைத் தூர்வார வேண்டும்.
# சென்னை - பெங்களூரு ஐ.டி. காரிடார் சாலை வேலூர் மாவட்டத்தை ஒட்டிச் செல்லும்படி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தைக் கொஞ்சம் மாற்றியமைத்து, அந்தச் சாலையை ராணிப்பேட்டை சிப்காட் வழியாக அமைத்தால், போக்குவரத்துச் சிரமங்கள் குறையும். வேலூர் மேலும் தொழில் வளர்ச்சி பெறும் என்கிறார்கள் சிறு, குறு தொழில் முனைவோர்.
# வாலாஜாவில் உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனையின் அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளன. மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும்.
# தொகுதி முழுவதுமே பல இடங்களில் கழிவுநீர் தேங்குவது, குப்பைகள் முறையாக அகற்றப்படாதது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நோய்களின் தாக்கமும் அதிகம். பொது சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.