பசுக்கள் இறப்பது அரசுக்கு நல்லதல்ல: ராமகோபாலன்

பசுக்கள் இறப்பது அரசுக்கு நல்லதல்ல: ராமகோபாலன்
Updated on
1 min read

கோமாரி நோயால் பசுக்கள் இறப்பது அரசுக்கு, ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள கதிர்காம சுவாமிகளின் அதிஷ்டானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற குரு பூஜை விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

கோமாரி நோயினால் இந்த பகுதியில் பதினைந்தாயிரம் மாடுகளுக்கு மேல் இறந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆராய்ச்சி நிறுவனம், கால்நடைபல்கலைக்கழகம், கால்நடைப் பராமரிப்புத்துறை என்று இத்தனை இருந்தும் அவற்றால் கால்நடைகளின் இறப்பைத் தடுக்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

இப்படி பசுக்கள் இறப்பது ஆட்சிக்கு, அரசுக்கு நல்லதல்ல என்பதையும் மனதில் கொண்டு கால்நடைகளின் இறப்பைத் தடுக்க வேண்டும். அத்தோடு நடுநிலையாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழு பரிந்துரைக்கும் உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொடுக்க வேண்டும். அதோடு நோய் பாதிப்பில்லாத இடங்களில் இருந்து மாடுகள் வாங்கி வந்து அவர்களிடம் கொடுக்க வேண்டும்.

கோயில் நகைகள் திருடு போவதையும், கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதையும் தடுத்து நிறுத்தி எல்லாவற்றையும் மீட்க வேண்டும். சமுதாய நலன் என்ற பெயரில் அரசே கையகப்படுத்தி வைத்திருக்கும் கோயில் நிலங்களை கோயில்களிடமே ஒப்படைக்க வேண்டும்” என்றார் ராமகோபாலன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in