விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டம்
Updated on
1 min read

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் சென்னை மெரினாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்கப்பட வேண்டும், விவசாயிகளின் மொத்த பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியிலும் 15 நாட்களுக்கும் மேலாக மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவு பிரிவு போலீஸார் ஏற்கெனவே, கணித்திருந்தனர். அதனால், அங்கு மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 500 போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். ரோந்து போலீஸாரும் போலீஸ் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், விவசாயி களுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகி மணிகண்டன் தலை மையில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மதியம் மெரினா நீச்சல் குளம் அருகே திரண்டனர். பின்னர், திருவள்ளுவர் சிலை பின்புறம் கடலில் 11 பேர் இறங்கினர். கையில் கோரிக்கை வாசகம் எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

இதை சற்றும் எதிர்பாராத போலீஸார், கடலுக்குள் நின்று போராட்டம் நடத்திய இளைஞர்களை வெளியே கொண்டு வர முயன்றனர். 5 இளைஞர்கள் மட்டும் பின்னோக்கி நகர்ந்தபடி கோஷமிட்டுக் கொண்டே ஆழமான கடல் பகுதிக்குச் சென்றனர். இடுப்பளவு நீரில் நின்று கொண்டு ‘விவசாயிகளை காப்பாற்றுங்கள், நிலங்களை காப்பாற்றுங்கள்’ என்று கோஷமிட்டனர்.

அவர்களை மீனவர்கள் உதவியுடன் போலீஸார் வெளியே அழைத்து வந்து கைது செய்தனர். அப்போது பேசிய இளைஞர்கள், “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும்வரை போராட்டம் தொடரும். டெல்லி சென்று விவசாயி களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போம்” என்றனர்.

இதற்கிடையில், நேற்று மாலை மீண்டும் 20 பேர் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மெரினா திருவள்ளுவர் சிலை அருகே திரண்டு கடலுக்குள் இறங்க புறப்பட்டனர். அவர் களையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மெரினாவில் மீண்டும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in