

இந்தியாவில் மோட்டார் வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த பாரத் ஸ்டேஜ் எமிசன் ஸ்டேன்டர்டு எனும் பிஎஸ் தொழில்நுட்பத்தை மாசு கட்டுப்பாடு வாரியம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு முதல் பிஎஸ் 3 தொழில்நுட்பம் அமலில் இருந்து வருகிறது. பின்னர் பிஎஸ் 4 தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. பிஎஸ் 4 தொழில்நுட்பத்திலும் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
புகையை வெளியிடுவது தொடர்பாக பிஎஸ் 3, பிஎஸ் 4 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய் வில் பிஎஸ் 3 வாகனங்களை ஒப்பிடும்போது, பிஎஸ் 4 தொழில்நுட்ப வாகனங்கள் 80 சதவீதம் குறைவாக புகையை வெளியிடுவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் வாகன புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் பிஎஸ் 3 வாகனங்களுக்கு மொத்தமாக விடை கொடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்தது.
இதற்காக ஏப். 1 முதல் (நாளை) பிஎஸ் 3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். அவர்கள் தங்கள் மனுவில், நாடு முழுவதும் பல்வேறு மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களில் பிஎஸ் 3 தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட 8.22 லட்சம் வாகனங்கள் இருப்பு உள்ளன. அவை விற்று முடியும் வரை பிஎஸ் 3 வாகனங்களுக்கு தடை விதிக்கக்கூடாது எனக் கூறி யிருந்தனர்.
உச்ச நீதிமன்றம் மோட்டார் வாகன தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத் துவிட்டது. பின்னர், மார்ச் 31-க்கு (இன்று) பிறகு பிஎஸ் 3 வாகனங்களை விற்கவோ, தயாரிக்கவோ, பதிவு செய்யவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பிஎஸ் 3 தொழில்நுட்பத்துடன் வாகனங்களை தயாரிக்கவோ, விற்கவோ, பதிவு செய்யவோ கூடாது என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஏப். 1 முதல் பிஎஸ் 3 வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என அனைத்து வட்டார போக்குவரத்து அலு வலர்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறியதாவது: பிஎஸ் 3 வாகனங்கள் பதிவுக்கு இன்றுதான் கடைசி நாள். இன்று கட்டணம் செலுத்த பல்வேறு காரணங்களால் பதிவுக்கு வராத வாகனங்கள் மறுநாள் பதிவு செய்யப்படும். மற்றபடி ஏப். 1 முதல் பிஎஸ் 3 வாகனங்கள் பதிவு செய்யப்படாது என்றார்.