Published : 19 Mar 2017 11:19 AM
Last Updated : 19 Mar 2017 11:19 AM

சிறப்பு நிதி ஒதுக்க வலியுறுத்தி ஏப்ரலில் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: 10 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1.50 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் அமைக்கப்படுகிறது. முந்தைய ஒப்பந்தங்களில் கூறப்பட்ட பல கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, ஓய்வூதியருக்கான பி.எப். தொகை, பணப் பலன்கள், விடுப்பு பணம் ஆகியவை இன்னும் வழங்கப்படவில்லை. தவிர, போக்குவரத்துத் துறை ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது.

இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலி யுறுத்தின. ஆனால், பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இது தொழிற்சங்கங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் நடந்தது. இதில் தொமுச பொருளாளர் கி.நடராஜன், சிஐடியு பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார், துணைத் தலைவர் அன்பழகன் ஏஐடியுசி பொருளாளர் கஜேந்திரன் உட்பட 10 தொழிற்சங்கங்களின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில், அரசு போக்குவரத்துத் துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் முதல் வாரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து கி.நடராஜன், ஆறுமுகநயினார் கூறியதாவது:

தினமும் ரூ.6.58 கோடி இழப்பு

டீசல் விலை உயர்வு, அரசு போக்குவரத்து கழகங்களில் வரவைவிட செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் போக்கு வரத்துத் துறை சுமார் ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது. ஒரு நாளுக்கு ரூ.6.58 கோடி என ஆண்டுக்கு ரூ.2,400 கோடி இழப்பு ஏற்படுகிறது. பழுதான பேருந்துகளை சீரமைக்க நிதி இல்லை. இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களைக்கூட அளிக்க முடியாத நிலை உள்ளது.

கடந்த பட்ஜெட்டில் 2,000 புதிய பேருந்துகள் வாங்க அரசு ரூ.275 கோடி ஒதுக்கியது. அதே தொகையே இந்த பட்ஜெட்டிலும் ஒதுக்கியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, போக்குவரத்துத் துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 13-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.

ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தத்தை ஏப்ரல் முதல் வாரம் தொடங்க உள்ளோம். இதில், தமிழகம் முழுவதும் சுமார் 1.50 லட்சம் ஊழியர்கள் கலந்துகொள்வார்கள் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x