

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வாணாபுரம் கிராமத்தில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஏரியில் கழிவுகளை கொட்டிய தற்கு, கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, “பருவ மழை பொழியும் போது வாணாபுரம் ஏரி நிரம்பும். அந்த நீரை விவசாயப் பயன்பாட்டுக்கும், குடிநீர் தேவை மற்றும் கால்நடைகளுக்கும் பயன் படுத்தப்படும்.
மேலும், சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது, ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். அந்த காலக்கட்டத்தில் பொதுப்பணித் துறை மூலம் மீன்கள் வளர்ப்பதற்கு ஏலம் விடப்படும்.
இந்நிலையில், சாத்தனூர் அணையில் இருந்து கடந்த மாதம் திறக்கப்பட்ட தண்ணீர், ஏரியை வந்தடைந்தது. இதையடுத்து, பொதுப்பணித் துறை மூலம் மீன்கள் வளர்க்க ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் மீன்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், ஏரியில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. மீன்களை வளர்ப்பதற்காக ஏரி யில், சர்க்கரை ஆலைக் கழிவுகள் கொட்டப்பட்டதாகத் தெரிகிறது. அதனால் ஏரியில் உள்ள தண்ணீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது. தற்போது கழிவுநீர் குட்டையாக காட்சி தருகிறது. ஏரித் தண்ணீரைப் பயன்படுத்த அஞ்சுகிறோம். கால்நடைகளுக்கும் கொடுக்க வில்லை. ஏரியைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.