Published : 19 Jan 2017 08:33 am

Updated : 16 Jun 2017 11:58 am

 

Published : 19 Jan 2017 08:33 AM
Last Updated : 16 Jun 2017 11:58 AM

கொங்கு மண்டலத்தை கொந்தளிக்க வைக்கும் கேரள தடுப்பணைகள்

வெங்கக்கடவு சிறுவாணி முதல் தேக்குவட்டை பவானி வரை...

வானி ஆறு பறிபோகிறது. அட்டப்பாடியில் அணை கட்டப்பட்டால் பவானி ஆறு வறண்டுபோகும். கொங்கு மண்டலமே பாலைவனமாகும். மக்கள் குடிநீரின்றி குடிபெயர நேரிடும். வேளாண்மை, தொழிற்சாலைகள் மூடுவிழா காணும். அணை காப்போம். நதி நீர் காப்போம். ஒன்றுபடுவோம். ஒன்று திரள்வோம் - இப்படியொரு ‘ரிங் டோன்’ கோவையில் தமிழ் ஆர்வலர்கள் செல்போன்களில் பிரபலம்.

இந்த ரிங்டோன் தற்போது கொங்கு மண்டலப் பகுதிகளில் கூடுதல் சப்தத்துடன் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. காரணம், கேரள அட்டப்பாடி பிரதேசத்தில் தேக்குவட்டை, மஞ்சிக்கண்டி ஆகிய கிராமங்களில் 2 தடுப்பணைகள் பணியை கேரள அரசு தொடங்கியுள்ளது.


அதைத்தொடர்ந்து, மேலும் 6 தடுப்பணைகள் பவானி நதிப்பாதையில் 20 கிலோமீட்டர் இடைவெளியில் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிராக கொங்குமண்டலப் பகுதி போர்க்கோலம்பூண ஆரம்பித்துள்ளது. திமுக, பெரியார் தி.க. உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள், விவசாய அமைப்புகள் வரும் 21-ம் தேதி கோவையில் மனித சங்கிலிப் போராட்டத்தையும், 29-ம் தேதி அட்டப்பாடியில் அணைகட்டும் பகுதியில் முற்றுகைப் போராட்டத்தையும் அறிவித்துள்ளன.

கேரள எல்லை க.க.சாவடியில் மதிமுகவினர் கேரள அரசுக்கு எதிராக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர். மேலும், இதற்காக தொடர் போராட்டங்களை அறிவித்து வருகிறது மதிமுக. முதலில் முக்காலி பவானி, பிறகு சித்தூர் சிறுவாணி என்று மோதிப்பார்த்த கேரளா தற்போது தேக்குவட்டை பவானியில் அணைகட்டுவதன் பின்னணியில் நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளது.

முக்காலி பவானி

கோவையிலிருந்து மேற்கே 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆனைகட்டியில் தொடங்கும் கேரளப் பகுதிகள் தாசனூர், சோலையூர், புதூர், கோட்டத்துறை, அகலி, முக்காலி, தாவளம், தொடுக்கி, சைலண்ட் வேலி, சிறுவாணி, சித்தூர், வெங்கமேடு என 198 பழங்குடி ஊர்களைக் கொண்டதாக விளங்குகிறது. இதுவே அட்டப்பாடி எனப்படுகிறது. பாலக்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் அட்டப்பாடி மலைக்காடுகளைக் கடந்தால் எட்டுவது மன்னார்காடு.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உருவாகும் பவானி ஆறு தமிழக காடுகளில் 3 கிலோமீட்டர் தொலைவு மட்டுமே பயணித்து, கேரள வனப் பகுதிகளுக்குள் நுழைந்து அட்டப்பாடி பிரதேசத்ததில் உள்ள சைலண்ட் வேலி அருகே உள்ள முக்காலி கிராமத்தை அடைகிறது.

இதுவரையிலான பவானியின் பயண தூரம் சுமார் 28 கிலோமீட்டர். இங்கிருந்து மேலும் 35 கிலோமீட்டர் தொலைவு வடகிழக்கே பயணிக்கும் பவானி தமிழகத்தின் பில்லூர் பகுதிக்கு வந்து சேருகிறது. பில்லூர் அணைதான் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது. 2003-ல் முக்காலி கிராமத்தில் பவானிக்கு குறுக்கே ரூ.100 கோடி மதிப்பீட்டில் பவானிக்கு குறுக்காக அணைகட்ட திட்டமிட்டு பூர்வாங்க வேலையையும் ஆரம்பித்தது கேரள அரசு. இதன் மூலம் ஆறு திசை திருப்பப்பட்டு, இங்கு 1,800 அடி உயரத்தில் கொட்டிக் கொண்டிருக்கும் மத்தம்பட்டி அருவியில் இணைப்பதே திட்டம். இதன் மூலம் மின்சாரம் (26 மெகாவாட்) தயாரிப்பதுதான் கேரள அரசின் திட்டம்.

இந்த ஆறு திசை திருப்பப்பட்டு செல்லும் வழியில் சர்வதேச குளிர்பான நிறுவனத்துக்கு தண்ணீர் சப்ளையும் மறைமுகமாக நடக்க உள்ளதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. அப்போது, கேரளத்தில் காங்கிரஸ் முதல்வர் அந்தோணி ஆட்சி. இடதுசாரிகள் இதற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். ஆறு திசை திருப்பப்படும் பகுதியில் உள்ள விவசாயிகள் பழங்குடிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பவானியில் தண்ணீர் என்பது கனவாகிவிடும் என்று விவசாயிகள், சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் யாவும் போராட்டத்தில் குதித்தன. அதேசமயம், தங்கள் பகுதிக்கு வரும் பவானி வறண்டுவிடும் என்ற பயத்தில் இதற்கு எதிர்ப் பகுதியில் உள்ள மல்லீஸ்வரன் மலை, கோட்டத்துறை, புதூர், அகழி, சோலையூர், முள்ளி பகுதிகளில் உள்ள கேரள மக்களும், அட்டப்பாடி பழங்குடியினரும் இந்த திட்டத்தை எதிர்த்தார்கள். தமிழகத்திலோ கடும் எதிர்ப்பு. திமுக, பெரியார் தி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனதாதளம் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் போராட்டங்களை நடத்தினார்கள். (இந்த சமயத்தில் தமிழ் ஆர்வலர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்டதுதான் பவானி ஆறு பறிபோகிறது செல்போன் ரிங்டோன்)

பவானி ஆறு போராட்டம் தொடர்பாக கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினர்.

இறுதியில், அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர்.பாலு கொடுத்த அழுத்தத்தின் விளைவாக, சுற்றுச்சூழல் அனுமதியைக் காரணம்காட்டி அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை செய்தது. அதனால் அணை கட்டுவது நின்றது. இந்த நிலையில், 8 ஆண்டுகள் கழித்து கடந்த 2012-ல் வெங்கக்கடவு சிறுவாணி அணை பணிகள் தொடங்கின.

வெங்கக்கடவு சிறுவாணி

கோவைக்கு தென்மேற்கில் கோவை குற்றாலம் அருகே முத்திக்குளம் (முக்காலிக்கு தென்கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில்) பகுதியில் பல்வேறு நீரோடைகளில் உருவாகும் சிறுவாணி, கேரளாவின் வெங்கக்கடவு, சித்தூர், சிறுவாணி, நெல்லே பள்ளி, கூழிக்கடவு, அகழி போன்ற அட்டப்பாடி மலைக் கிராமங்கள் என 25 கிலோமீட்டர் கடந்து கூட்டப்பட்டியில் பவானியில் கலக்கிறது. இது மேலும் 10 கிலோமீட்டர் பயணித்து தமிழகத்தின் பில்லூர் அணைக்கு வந்து சேருகிறது.

முக்காலி கிராமமும், சித்தூர் வெங்கக்கடவுக்கும் 30 கிலோமீட்டர் தொலைவு என்றாலும் இரண்டுமே அட்டப்பாடி பிரதேசத்தை சேர்ந்தவைதான். இந்த சித்தூர் வெங்கக்கடவுக்கு சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில்தான் கோவைக்கு குடிநீர் தரும் சிறுவாணி அணை உள்ளது. அதில் வெளியேறும் உபரிநீர்தான் கூட்டப்பட்டிக்கு வருகிறது. சித்தூர் வெங்கக்கடவில் அணை கட்ட 70 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷ் அதிகாரிகள் திட்டுமிட்டுள்ளார்கள். அதன் பிறகு 1969-ம் ஆண்டிலும், 1976-ம் ஆண்டிலும் அணை கட்டத் திட்டமிட்டனர். அப்போது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. காவிரி நடுவர்மன்ற ஒப்பந்தப்படி, காவிரியின் கிளை நதிகளில் 10 டிஎம்சி நீர் வரை கேரளா எடுத்துக் கொள்ள உரிமம் உள்ளது. அதற்கேற்ப தடுப்பணைகள் கட்டிக் கொள்ளவும் கேரள அரசுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதற்காக 247 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி, ரூ.200 கோடி மதிப்பில் அணை திட்டமும் தயாரித்திருக்கிறது கேரள அரசு. இதற்கான அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு, வாகனங்கள் வாங்கப்பட்டு, மலைகள் குடையப்பட்டு பாதி வேலை முடிந்த நிலையில் அணைப் பணிகள் நிறுத்தப்பட்டன. ‘ரூ.7.5 கோடி செலவு. அதில் முறைகேடு’ என்றெல்லாம் புகார்கள் கிளம்பி, சர்ச்சைகளோடு நின்றுபோனது அணைப் பணிகள்.

இந்தநிலையில்தான், இதே சித்தூர் வெங்கக்கடவில் நிலுவையில் நின்ற அணைப் பணிகளைத் தொடரவும், மேலும் பவானி மற்றும் சிறுவாணி ஆற்றின் வழிப்பாதையில் மொத்தம் 12 தடுப்பணைகள் கட்டவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது. காவிரி நதிநீர் பங்கீட்டில் 6.5 டிஎம்சி நீர் பவானி, சிறுவாணி ஆற்றில் தேவையான இடங்களில் எடுத்துக் கொள்ளலாம் என்றிருப்பதை சுட்டிக்காட்டியே இந்த திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. “இது முல்லை பெரியாறுக்கான பழிவாங்கும் நடவடிக்கை. இங்கே அணைகள் கட்டப்பட்டால், கோவை திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்படும்” என்று தமிழக விவசாயிகள் புகார் தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கேரள எல்லையான க.க.சாவடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர்.

“இந்த அணையை கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளிக்கக் கூடாது” என்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து, சிறுவாணி ஆற்றில் அணை கட்டுவதற்கான ஆய்வுகளை அப்போதைக்குக் கைவிட்டது கேரள அரசு. எனினும், தடையின்மைச் சான்று கோரி தமிழக அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியது கேரளா. தமிழக தரப்பில் பதில் இல்லாததால், ஒருதலைப்பட்சமாக அட்டப்பாடியில் 4 மாதங்களுக்கு முன் அணைகட்ட கேரளத்துக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசின் நீர்ப்பாசன மதிப்பீட்டுக்குழு. அதை முன்வைத்து, சித்தூரிலிருந்து கூட்டப்பட்டி வரை சிறுவாணியில் 3 தடுப்பணைகள், முக்காலியிலிருந்து கூட்டப்பட்டி வரை பவானியில் 5 அணைகள் என மொத்தம் 8 அணைகள் மட்டுமே கட்ட கேரள அரசு திட்டமிடப்பட்டதாகக் கூறப்பட்டது.

அணை பணிக்காக சித்தூர் வெங்கக்கடவு பகுதியில் 500 லோடு அளவுக்கு மணல், ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. இதையொட்டி எழுந்த போராட்டத்தின் விளைவாக, தமிழகப் பகுதியிலிருந்து மணல், ஜல்லி, கருங்கல் அனுப்புவது தடுக்கப்பட்டது.

அதேசமயம், “நாங்கள் அணைப் பணிகளை ஆரம்பிக்கவில்லை. சாலைதான் அமைக்கிறோம்” என கேரள அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர். இதேபோல, “தமிழகத்தின் விருப்பத்துக்கு மாறாக எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் அட்டப்பாடி ஆற்றுப் பகுதியில் மேற்கொள்ளக்கூடாது” என்று மத்திய அரசும் உத்தரவு பிறப்பித்தது.

தேக்குவட்டை தடுப்பணை

கடந்த 4 மாதங்களாக அமைதியாக இருந்த கேரளம், தற்போது முக்காலிக்கு கீழே 8 மற்றும் 10 கிலோமீட்டர் தொலைவில் மஞ்சிக்கண்டி, தேக்குவட்டை கிராமங்களில் பவானிக்கு குறுக்காக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது. பவானி ஆற்றில் பாதி மறிக்கப்பட்டு, அங்கே பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 15 அடி ஆழத்துக்கு அஸ்திவாரப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல லாரிகளில் ஜல்லி, கருங்கற்கள் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு கொட்டப்பட்டுள்ளன. பவானி ஆறு பாதியளவு மறிக்கப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

தேக்குவட்டை கிராமத்தில் 10 நாட்களாகவும், மஞ்சிக்கண்டியில் 2 நாட்களாகவும் இந்தப் பணிகள் நடந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதையடுத்தே, கோவை மண்டலப் பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்தப் பணிகளை பார்வையிட்ட பெரியார் தி.க. நிறுவனத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், அனைத்துக் கட்சியினருடனும் ஆலோசனை நடத்தினர். “பவானி ஆற்றின் குறுக்கே மட்டும் மொத்தம் 6 தடுப்பணைகளை கட்டத் திட்டமிட்டுள்ளனர். அதில், தேக்குவட்டை பவானியில் 200 அடி நீளம், 15 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டுள்ளது. அதற்கேற்ப 15 அடி உயரத்துக்குமேல் தடுப்புச் சுவர் எழுப்பலாம். அந்த அளவு தண்ணீர் தேங்கினால், இப்போது தமிழகத்துக்கு வரும் பவானி ஆறு முற்றிலுமாக வறண்டுவிடும். மற்ற அணைகளும் கட்டிமுடிக்கப்பட்டு, தண்ணீர் தடுக்கப்பட்டால் தமிழகத்தின் நிலை என்னவாகும்?” என்று கேள்வி எழுப்பினார்.

திமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேசும்போது, “2003-ல் டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தார். அதனால், அழுத்தம் கொடுத்து பணிகளைத் தடுக்க முடிந்தது. இப்போது யாருமில்லை. நாம் போராடித்தான் தடுத்தாக வேண்டும். அவர்கள் அணை கட்ட ஆரம்பித்துவிட்டனர். வேகமாகப் பணியாற்றினால் ஒரு மாதத்துக்குள் தடுப்பணைகளை கட்டிவிடுவார்கள். எனவே, உடனே களத்தில் இறங்கிப் போராட வேண்டும். ஏற்கெனவே தண்ணீர் இல்லாமல் கிடக்கும் பவானி இந்த அணைகள் கட்டப்பட்டாலே வறண்டுபோகும். கோவை, திருப்பூர் மாவட்டங்கள் குடிநீருக்குத் தவிக்க நேரிடும். பவானிசாகருக்கு தண்ணீர் வராமல், லட்சக்கணக்கான ஏக்கர் பாசனமும் காணாமல் போகும்” என்றார்.

வரும் 21-ம் தேதி கோவையில் மனித சங்கிலிப் போராட்டம், 29-ம் தேதி அட்டப்பாடியில் அணை கட்டும் பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்தவும், தமிழக, கேரள முதல்வர்களை சந்தித்து மனுக்களும் கொடுக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. “கேரளத்தைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் பேர் கோவையில் வசிக்கின்றனர். அவர்களையும் அழைத்துப் பேசி, இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வைப்பது” என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்கவே தடுப்பணை…

தேக்குவட்டை, மஞ்சிக்கண்டி விவசாயிகள் கூறும்போது, “இங்கே சைலன்ட்வேலி முதல் முக்காலி, கல்கண்டி, செம்மண்ணூர், பாக்குளம், தாவளம், பாடவயல், மஞ்சிக்கண்டி, தேக்குவட்டை, கீரைக்கடவு, சாவடியூர், சாலையூர் என, பவானி ஆறு செல்லும் கிராமங்களில் பெயருக்குத்தான் ஆறு செல்கிறதே ஒழிய, குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. வறட்சிக்காலங்களில் ஒரு குடம் தண்ணீரை ரூ.12-க்கு வாங்குகிறோம். பவானி ஆற்றின் நீரை பம்ப் செட் மூலம் எடுத்து பாசனத்துக்குப் பயன்படுத்துகிறோம். இங்கே பழங்குடியினருக்கு சமமாக, 500 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள் வசிக்கின்றனர். சுமார் 2,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவே, இந்தப் பகுதியில் 6 தடுப்பணைகள் கட்டுவதாக தெரிவித்துள்ளனர். அதிலிருந்து 15 ஹெச்.பி. முதல் 20 ஹெச்.பி. மேட்டார் மூலம் தண்ணீர் எடுத்து மேட்டுப் பகுதிகளுக்கும் கொடுக்க உள்ளார்கள். இது இங்குள்ளவர்களின் ஜீவாதாரப் பிரச்சினை. அதை தீர்த்துவைக்கவே இங்கு தடுப்பணை கட்டுகிறார்கள். அதிலும் 2 அணைகளின் வேலைகளை இப்போதுதான் ஆரம்பித்துள்ளார்கள். அதற்குள் இங்கு தண்ணீர் தேக்கினால், பவானியே வறண்டுபோகும் என்று சொன்னால் எப்படி?” என்று கேள்வி எழுப்பினர்.கொங்கு மண்டலம்கேரள தடுப்பணைகள்வெங்கக்கடவு சிறுவாணிதேக்குவட்டை பவானிமுக்காலி பவானி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x