

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேர் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பிணை ஆணை வழங்கப்பட்டு 2 நாளாகியும் இவர்களால் வெளியே வர முடியவில்லை.
தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என சொல்லப்பட்ட இடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது அவர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட சில வழக்குகளில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேர் தஞ்சை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பிணையில் தங்களை விடுவிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விண்ணப்பித்திருந்தனர்.
சில நிபந்தனைகளுடன் இவர்கள் பிணையில் செல்ல உத்தரவிட்டி ருந்தார் உயர் நீதிமன்ற நீதிபதி. அந்த உத்தரவைச் செயல்படுத்துவதில் நீதித்துறையில் உள்ளவர்களுக்கும் நெடுமாறன் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே வேறுபட்ட கருத்து நிலவியதால் நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் வியாழக்கிழமை பிணையில் வெளியாக முடிய வில்லை.
நெடுமாறனின் வழக்கறிஞர் வடிவேலிடம் பேசியபோது, “இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘இவர்கள் வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பிணையில் செல்லலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு நடை பெறும் ஜுடீசியல் மாஜிஸ்திரேட் எண் 2ன் நடுவர் அவரது உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து முடிவு சொல்லத் தாமதமாகி விட்டது. அதன் பிறகு நீதிமன்றப் பணியாளரை அழைத்துக்கொண்டு திருச்சி சிறைக்கு வந்தபோது ‘கைதிகளை பிணையில் விடுவதற்கான அலுவல் நேரம் முடிந்துவிட்டது. அதனால் நாளை வாருங்கள்’ என சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவித்து விட்டனர்” என்றார்.
திருச்சி மத்திய சிறைக் கண்கா ணிப்பாளர் பழனி தெரிவித்தது: “எங்களுக்கு பிணையில் சிறைவாசிகளை வெளியே அனுப்பு வதற்கான இறுதி நேரம் மாலை 5 மணி. வியாழக்கிழமை மாலை 5 மணிவரை இவர்களுக்கான பிணை ஆணை எங்களுக்கு வந்து சேரவில்லை. அதனால் அவர்களை பிணையில் அனுப்பவில்லை” என்றார்.
விடுதலையாகி வெளியேவரும் நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களை வரவேற்பதற்காக பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ம.தி.மு.க.வினரும் திருச்சி மத்திய சிறைக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்தனர்.
மாலை 7 மணிக்குப் பிறகு நெடுமாறன் வெளியேவர வாய்ப்பில்லை என தகவல் சொல்லப்பட்டதால் அவர்கள் சோகத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.