

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே இயங்கும் சித்த மருத்துவமனையை பாதுகாப்பான கட்டிடத்துக்கு மாற்றி, அனைத்து நாட்களிலும் செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கோவை நகரில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுவது ஆட்சியர் அலுவலகம். அடுத்தடுத்து அரசுத் துறை அலுவலகங்கள் இருப்பதால் அதிகளவில் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். அரசுத் துறைகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இங்கு பணியாற்றுவதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு இதுவரை நிரந்தர மருத்துவ அலுவலர்களோ, மருத்துவமனை ஊழியர்களோ நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தொற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்துவரும் தற்போதைய சூழலில், மிகவும் மோசமான கட்டிடத்தில், சுகாதாரமற்ற சூழலில் இந்த மருத்துவமனை இயங்குவதாகவும், அதுவும் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே திறந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
கருவூல ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘டெங்கு காய்ச்சல் பரவியபோது, இங்குள்ள அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்க ளுக்கும் சித்த மருத்துவப் பிரிவே பெருமளவில் உதவியது. நிலவேம்பு குடிநீர் கிடைக்கும் என்பதால் அங்கு தேடிச் செல்வோர் இன்றுவரை அதிகம். இப்போது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் அதற்கான கபசுரக் குடிநீர் போன்ற மருந்துகள் சித்த மருத்துவமனையில் தான் கிடைக்கும். திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் மையம் இயங்குவதால் எல்லோராலும் சிகிச்சை பெற முடிவதில்லை. மருத்துவ அலுவலரும் நிரந்தரமாக இல்லாததால், சிகிச்சையும் முழுமையாகக் கிடைப்பதில்லை’ என்றார்.
ஆட்சியர் அலுவலக வளா கத்தின் முன்புறம் உள்ள பழைய கட்டிடத்தில் இந்த மருத்துவமனை இயங்கியது. புதிய அலுவலகம் கட்டப்பட்டதை முன்னிட்டு பின்புறம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மருத்துவமனை இருப்பதே தெரியாத அளவுக்கு, பாழடைந்த ஓர் அறை ஒதுக்கப்பட்டிருப்பதால், மருந்துகள் வைக்கவும், சிகிச்சை அளிக்கவும் வசதிகள் இன்றி மருத்துவ ஊழியர்கள் தவித்து வருகின்றனர். வசதியான நிரந்தரக் கட்டிடமும், நிரந்தர ஊழியர்களும் இருந்தால் மட்டுமே நல்ல முறையில் செயல்பட முடியும் என்கின்றனர் இங்குள்ள ஊழியர்கள்.
கோவை, திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வள்ளியிடம் கேட்டபோது, ‘ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுக்கு குறைந்த அளவே மருந்துகள் ஒதுக்கப்படுகின்றன.
அதேபோல, நிரந்தர மருத்துவ அலுவலர், ஊழியர்கள் இல்லை. மாவட்டம் முழுவதும் இந்த பிரச்சினை இருக்கிறது. மக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடம் என்பதால் இங்கு நிரந்தரப் பணியிடம் ஏற்படுத்த வலியுறுத்துகிறோம். அதேபோல, நிரந்தர கட்டிடம் வேண்டுமென மருத்துவ அலுவலர் மூலம் ஆட்சியருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்படும்’ என்றார்.