Published : 28 Mar 2017 01:16 PM
Last Updated : 28 Mar 2017 01:16 PM

ரூ.1.65 கோடி வரி பாக்கி: அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கெடு: ஈரோடு மாநகராட்சி அதிரடி

ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.1.65 கோடி வரி பாக்கியை 24 மணி நேரத்துக்குள் செலுத்தாவிடில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தை ஜப்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை வசூல் செய்வதில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நிதியாண்டு முடிவடைய நான்கு நாட்களே உள்ள நிலையில், வரி பாக்கி வைத்திருப்பவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சி உதவி ஆணையர் மாரிமுத்து, உதவி வருவாய் அலுவலர் விஜயா மற்றும் அதிகாரிகள் மாநகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்றனர். பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்துக் கழக அலுவலகம் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 867-யை வழங்கும்படி அங்கிருந்த, அரசு போக்குவரத்துக் கழக உதவிப் பொறியாளர் நந்தகுமாரிடம் கேட்டனர்.

அவர் எவ்வித பதிலும் கூறாமல் கதவை அடைத்துக் கொண்ட நிலையில், போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட அதிகாரிகள் வரிபாக்கி குறித்து தெரிவித்தனர். வரி பாக்கி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி உதவி ஆணையர் மாரிமுத்து கூறியதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல அலுவலகத்தில் 800 ஊழியர்களுக்கு பிடித்தம் செய்த தொழில் வரி ரூ.1.14 கோடி, கோணவாய்க்காலில் உள்ள பவானி பணிமனை அலுவலகம் செலுத்த வேண்டிய ரூ.50 லட்சம், பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் அலுவலக வாடகை பாக்கி ரூ.1.25 லட்சம், சென்னிமலை சாலையில் உள்ள பணிமனை இடவாடகை ரூ.2.20 லட்சம் என அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மொத்தம் ரூ.1.67 கோடி பாக்கி உள்ளது.

இந்த வரியினங்கள் 2010-ம் ஆண்டு முதல் செலுத்தப்படாமல் உள்ளது. இதை செலுத்தும்படி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் செலுத்தவில்லை. எனவே, 24 மணி நேரத்துக்குள் செலுத்தும்படி இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளோம். இல்லையெனில் காவல்துறை உதவியுடன் போக்குவரத்து அலுவலகங்களை ஜப்தி செய்வோம்.

அதேபோல பேருந்து நிலைய வளாகத்தில் செயல்படும் காதி விற்பனை நிலையம் ரூ.2 லட்சம் வரி பாக்கி வைத்திருந்ததால் அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x