மணல் கடத்தலை தடுத்த காவல் ஆய்வாளர் சிறைபிடிப்பு: அதிமுக பிரமுகர் உட்பட 15 பேர் கைது

மணல் கடத்தலை தடுத்த காவல் ஆய்வாளர் சிறைபிடிப்பு: அதிமுக பிரமுகர் உட்பட 15 பேர் கைது
Updated on
1 min read

மணல் கடத்தல் லாரியை பறிமுதல் செய்ய முயன்ற காவல் ஆய்வாளரை தாக்கிய புகாரில் அதிமுக பிரமுகர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: வேலூர் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் பாண்டி நேற்று முன்தினம் இரவு பெருமுகை அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி நிற்காமல் சென்றதால், லாரியை தனது ஜீப்பில் விரட்டிச்சென்றார்.

பெருமுகை பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள் லாரி நுழைந்தது. கல்லூரிக்குள் நுழைய முயன்ற போது போலீஸ் வாகனத்தை அங் கிருந்த பாதுகாவலர்கள் அனு மதிக்கவில்லை. இதையடுத்து, மணல் கடத்தல் வாகனத்தை பறிமுதல் செய்ய வந்திருப்பதாகக் கூறி ஆய்வாளர் கல்லூரிக்குள் நுழைந்தார். இதைக்கண்ட லாரி ஓட்டுநர் தப்பியோடினார்.

இதையடுத்து, ஆய்வாளர் பாண்டி லாரியை பறிமுதல் செய்ய முயன்றபோது, அவருடன் கல்லூரி தாளாளரும் அதிமுக பிரமுகரு மான ஜி.ஜி.ரவி தகராறில் ஈடுபட்ட தாக தெரிகிறது. எனினும், லாரியை பறிமுதல் செய்ய ஆய்வாளர் பாண்டி முயன்றதால், அவரை ஜி.ஜி.ரவியும் அவரது ஆட்களும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆய்வாளரையும், ஜீப் ஓட்டுநரையும் சிறைபிடித்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து, காவல் ஆய்வாளர் பாண்டி, ‘வாக்கி டாக்கி’ மூலம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பன்னீர் செல்வம், போக்குவரத்து ஆய்வா ளர் சீதாராமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் மீட்டனர். தாக்குதலுக்கு ஆளான ஆய்வாளர் பாண்டி, வேலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

15 பேர் கைது

அதிமுக பிரமுகர் ஜி.ஜி.ரவியை வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஜி.ஜி.ரவி உட்பட 15 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஜி.ஜி.ரவி மீது செம்மரம் கடத்தல், ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, மணல் கடத்தல், கந்து வட்டி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் கிடைக்காததால் சுயேச்சையாக நின்று தோல்வியை தழுவினார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பிறகு மீண்டும் கட்சியில் இணைந்தவர்.

உயிர் தப்பியவர்

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் நடந்த ஒரு திருவிழாவின்போது இவரை கொலை செய்ய பிரபல ரவுடி மகா (எ) மகாலிங்கம் முயன்றார். அதில் இருந்து ஜி.ஜி.ரவி உயிர் தப்பினார். அப்போது, ரவியின் 2 மகன்களும் மகாவை கொலை செய்தனர். இந்த வழக்கில் ரவியின் 2 மகன்களும் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in