

கர்நாடகாவில் இருந்து தமிழகத் துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த 5-ம் தேதி இரவு முதல் தமிழகப் பேருந்துகள் கர்நாடகாவுக்குள் செல்லாமல் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் இருந்தும் ஓசூர் வழியாக பெங்களுரு, மைசூரு உள்ளிட்ட கர்நாடகாவின் பல்வேறு நகரங் களுக்கு இயக்கப்படும் 138 விரைவு பேருந்துகள் உட்பட 450-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், ஓசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக கடந்த வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் தமிழகப் பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் எல்லைப் பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகாவில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கி யது. இதனிடையே, தமிழகத்துக்கு செப்டம்பர் 20-ம் தேதி வரை காவிரி யில் நீர் திறந்துவிட வேண்டும் உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனால் கர்நாடகாவில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. தமிழக வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. சரக்கு வாகனங்கள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனால் இரு மாநிலங்களிடையே மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநில எல்லையான ஜூஜூவாடி, கக்கன்புரம், டிவிஎஸ், அந்திவாடி உள்ளிட்ட வழித்தடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அவ்வழியே தமிழக பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனங்கள், கார், லாரி, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் கர்நாடகாவுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதேபோல், கர்நாடகாவில் இருந்து அம்மாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் வெளியே வர வும் தடைவிதிக்கப்பட்டது. கிருஷ் ணகிரி சுங்கச்சாவடியில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டது.