

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட பேரணியின்போது தீக்குளித்து இறந்த விக்னேஷுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் தீக்குளித்து உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எவ்வளவு தீவிரமான பிரச்சினையாக இருந்தாலும் அதற்காக உயிரோடு இருந்து வாழ்நாள் முழுவதும் போராட வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது. உயிரை விடுவது சோகமயமானதும், ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இன்றைய இளைஞர்கள் இதனை உணர்ந்து தங்களது போராட்ட வழிமுறைகளை வகுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.