Last Updated : 12 Dec, 2013 10:10 AM

 

Published : 12 Dec 2013 10:10 AM
Last Updated : 12 Dec 2013 10:10 AM

சென்னையில் செட்டாப் பாக்ஸ் திட்டத்தை உடனடியாக அமல் செய்யுங்கள் - டிராய் எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் டிஜிட்டல் கேபிள் டி.வி. (செட்டாப் பாக்ஸ்) சேவையை உடனடியாக வழங்காத கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்எஸ்ஓ-க்கள் (மல்டிபிள் சிஸ்டம் ஆபரேட்டர்கள்) எனப்படும் கேபிள் டிவிக்களுக்கு பல்வேறு தொலைக்காட்சி சானல்களை வழங்குகிற அமைப்புகள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்திட்டத்தை அமல்படுத்துவர்களுக்கு மட்டுமே தொலைக்காட்சி சிக்னல்களை வழங்கவேண்டும் என்று தொலைக்காட்சி சேனல்களின் உரிமையாளர்களுக்கும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரில் கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதியில் இருந்து கேபிள் டி.வி.சேவையை “அனலாக்” எனப்படும் தற்போதைய ஒளிபரப்பு முறையில் இருந்து அடுத்தகட்ட நவீன ஒளிபரப்பு முறையான டிஜிட்டல் முறைக்கு கட்டாயமாக மாற்ற வேண்டும் என்று கூறி, மத்திய அரசு உத்தரவிட்டது.

தங்களுக்கு வேண்டிய சேனல்களை மட்டும் தெளிவாகக் காட்டுவதாகவும், இதர சேனல்களை தெளிவாகத் தெரியாதவகையில் சில எம்.எஸ்.ஓ.க்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் கேபிள் டி.வி. டிஜிட்டல் முறை ஒளிபரப்பை டிஜிட்டல் முறையில்தான் அளிக்க வேண்டும் என்றும், முதல்கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் அதை அமல்படுத்த வேண்டும் என்றும் டிராய் உத்தரவிட்டது. டிஜிட்டல் ஒளிபரப்பில் அனைத்து சேனல்களும் ஒரே தரத்தில், சீராக பார்க்க முடியும் என்பது சிறப்பு.

இதைத் தொடர்ந்து, அனைத்து நகரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், சென்னையில் சில இடங்களில் மட்டுமே செட்டாப் பாக்ஸ்களை எம்.எஸ்.ஓ.க்களும், கேபிள் ஆபரேட்டர்களும் தந்துள்ளனர். மற்ற இடங்களில் சேனல்கள் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு “அனலாக்” முறையிலேயே ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதேசமயத்தில் அதிக கட்டணமும் (ரூ.100 முதல் ரூ.125) வாங்கி வருகிறார்கள். இதையறிந்த டிராய், சென்னையில் உள்ள எம்.எஸ்.ஓ.க்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களை புதுடெல்லிக்கு அழைத்து கடந்த 9-ம் தேதி கூட்டம் நடத்தியது.

அதில், செட்டாப் பாக்ஸ் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தாதவர்கள் மீது கடுமையான, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை அமல்படுத்து பவர்களுக்கு மட்டுமே சிக்னல்களை வழங்கவேண்டும் என்று தொலைக்காட்சி சேனல்களின் உரிமையாளர்களுக்கும் டிராய் தகவல்கள் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x