காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
Updated on
1 min read

காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வரும் கலவரத்தால் கடந்த சில மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து விட்டதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் அமைதியின்மைக்கு அங்கு அதிகரித்து வரும் பிரிவினைவாத, பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடுகளே காரணம்.

பயங்கரவாத இயக்கங்களை ஆரம்ப கட்டத்திலேயே ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக பயங்கரவாத இயக்கங்களை பாகிஸ்தான் அரசு ஊக்குவித்து வருகிறது. இதனை இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து கண்டிக்க வேண்டும்.

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பயங்கரவாத இயக்கங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காஷ்மீர் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கித் தர வேண்டும். காஷ்மீர் மக்களுக்காக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in