

சென்னை மாவட்ட ஆட்சியர் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை மாவட்ட ஆட்சியர் ஜி.கோவிந்தராஜ், கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வி.ராஜா ராமன், நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையராகவும், கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தோட்டக்கலைத் துறை இயக்குநராகவும், கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், நில நிர்வாகத்துறை இணை ஆணையராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால், கால்நடை பராமரிப்புத்துறை இணைச் செயலா ளராகவும், தஞ்சை மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்கு நராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும தலைமை செயல் அதிகாரியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காக்கர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவை நிறுவன நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் உள்ளிட்ட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சேலம் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாநில குற்ற ஆவண காப்பக ஐஜியாகவும், கரூர் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே, சென்னை பெருநகர காவல் ஆணையரக கட்டுப் பாட்டு அறை துணை ஆணையராகவும், புதுக்கோட்டை எஸ்பி சந்தோஷ் ஹதிமானி, சென்னை காவல் பயிற்சிக் கல்லூரி முதல்வராகவும், ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்பி எஸ்.சேவியர் தன்ராஜ், க்யூ பிரிவு எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு எஸ்பி எஸ்.சரவணன் உட்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.