

திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தனது மனைவி மற்றும் மகளுடன், கோபாலபுரம் வந்து, தனது தாய் தயாளுவை சந்தித்து நலம் விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, ஆறு மாதங்களுக்கு முன்பு, பல்வேறு பிரச்சினைகளால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக முக்கியத் தலைவர்கள் ஒப்புதல் அளித்து விட்டதாகவும், உட்கட்சித் தேர்தல் முடிந்ததும் அவர் கட்சியில் சேர்க்கப்படலாம் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மு.க.அழகிரி தனது மனைவி காந்தி அழகிரி, மகள் கயல்விழி ஆகியோருடன், நேற்று நண்பகல் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து, தனது தாய் தயாளுவை சந்தித்து நலம் விசாரித்து விட்டுச் சென்றார். அவர் வந்த நேரத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியுடன் மாடியில் பேசிக் கொண்டிருந்தார். கருணாநிதியை சந்திக்காமல் தாயை பார்த்து விட்டு மு.க.அழகிரி உடனடியாகப் புறப்பட்டு விட்டார் என்று திமுக தலைமைக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.