

அரக்கோணம் அருகே ‘வாட்ஸ் அப்’ குழு மூலம் மாணவர்களை ஒன்று திரட்டி, நீர்வரத்துக் கால்வாய் மற்றும் கிணறுகளை இளைஞர்கள் நேற்று தூர்வாரினர்.
அரக்கோணம் அருகே ‘வாட்ஸ் அப்’ குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் அரக்கோணம் தாலுகாவில் நீர், நிலம், தண்ணீர் பிரச்சினை, விவசாயம் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி, அதற்கான முயற்சியில் குருராஜபேட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களின் இத்தகைய முயற்சியை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து குருராஜபேட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் கூறும்போது, ‘‘குருராஜபேட்டையைச் சேர்ந்த 50 பேர் கொண்ட எங்கள் குழுவினர், ‘நீர் நிலம் பாதுகாப்பு’ என்ற குழுவை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கினோம்.
இக்குழுவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் என 80 பேர் உறுப்பினர்களாக உள்ளோம். குருராஜபேட்டையைச் சுற்றியுள்ள ஏரி, கால்வாய், ஆழ்துளைக் கிணறு, நீரின்றி தவிக்கும் கிராமங்களை செல்போன் மூலம் படம்பிடித்து குழுவில் பதிவிட்டு வந்தோம். இதையடுத்து, மாதம் ஒரு முறை குழு உறுப்பினர்களை ஒன்று திரட்டி, ஆலோசனைக் கூட்டம் நடத்தி நீராதாரத்தைப் பெருக்க திட்டமிட்டோம்.
அதற்கான நிதியை குழு உறுப்பினர்கள் மூலம் திரட்டினோம். இதையடுத்து, விடுமுறை நாட்களில் நீர் நிலைகளைப் பாதுகாக்க முடிவு செய்தோம். முதல் கட்டமாக மே 1-ம் தேதி (நேற்று) குருராஜபேட்டை தங்கச்சாலை தெருவில் உள்ள பாழடைந்த கிணற்றை தூர்வாரினோம்.
கடந்த பல ஆண்டுகளாக நீரின்றி வறண்டு காணப்பட்ட கிணற்றில், தற்போது தண்ணீர் ஊற்றெடுத்துள்ளது. அதேபோல், குருராஜபேட்டை பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள ஏரி பல ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது. நீர்வரத்து கால்வாய்களில் வளர்ந்துள்ள முட்புதர்கள், கருவேலச் செடிகளை அகற்றி வருகிறோம்.
அதேபோல், குருராஜ பேட்டையில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க முயற்சி எடுக்க உள்ளோம். இனி வரும் விடுமுறை நாட்களில் இதேபோன்று ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட உள்ளோம்’’ என்றனர்.