

காப்பீட்டுக் கட்டணம் தொடர்பான லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால், ஏப்ரல் 8-ம் தேதி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.
தமிழக அரசு சமீபத்தில் வாகனப் பதிவு, நிதி நிறுவன பதிவு, தாமதக் கட்டணம் உள்ளிட்ட வற்றை உயர்த்தியது. பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியையும் அதிகரித்த தால், அவற்றின் விலையும் உயர்ந்தன. இது தவிர, மத்திய அரசும் தன் பங்குக்கு காப்பீட்டுக் கட்டணத்தை 40 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்தது. ஏற்கெனவே வாகன உதிரி பாகங் களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், லாரி உரிமையாளர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வேலை நிறுத்தத்தில் கடந்த மார்ச் 30-ம் தேதி இறங்கினர்.
போராட்டம் தொடங்கியதும் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் லாரி உரிமையாளர்களை அழைத்து பேசினார். ஆனால், அதில் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து, நேற்று முன்தினம் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், ஹைதராபாத்தில் நடந்த காப்பீட்டுக் கட்டணம் தொடர்பான பேச்சு வார்த்தையில் முடிவு கிடைக்காததால் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், தென்னிந்திய அளவில் நடக்கும் இப்போராட்டம் வரும் 8-ம் தேதி முதல் அகில இந்திய அளவில் நடக்க உள்ளது. இது தொடர்பாக, மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:
ஹைதராபாத்தில், ஐஆர்டிஏவுடன் நடந்த பேச்சுவார்த்தையில், உயர்த்தப்பட்ட 40 சதவீத காப்பீட்டுக் கட்டணத்தை 10 சதவீதம் கூட குறைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால், லாரி உரிமையாளர் களுக்கு ரூ.10 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. ஹைதராபாத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பிலும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்கள் ஏற்கெனவே 20-ம் தேதி போராட்டம் அறிவித்திருந்தனர். ஐஆர்டிஏவின் முடிவை எதிர்த்து அவர்கள் 8-ம் தேதி முதலே போராட்டத்தை தொடங்குகின்றனர். இதனால், நாடு முழுவதும் 60 லட்சம் லாரிகள் போராட்டத் தில் பங்கேற்கும். தமிழகத்தில் நான்கரை லட்சம் லாரிகள் பங்கேற்கின்றன. டேங்கர் லாரிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டாலும், அகில இந்திய அளவில் நோட்டீஸ் வழங்கப்பட்டால் அவர்களும் பங்கேற்கலாம். அதற்கான வசதி ஒப்பந்தத்தின் விதிகளில் உள்ளது.
தமிழக அரசிடம் நாங்கள் வைத்துள்ள கோரிக்கைகளில் முக்கியமானது பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான். இதன் மீது முதல்வர், நிதியமைச்சர் ஆகியோர் முடிவெடுப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி நிதியில் வாகனம் வாங்கும் போது, அந்த விவரங்களை இணைப்பதற்கான கட்டணத்தை ரூ.100-லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தினர். அதை தற்போது ரூ.300 ஆக தமிழக அரசு குறைத்துள்ளது. அதேபோல், வாகன தகுதிச் சான்றிதழ் (எப்சி) காலம் முடிந்துவிட்டால், அதன்பின் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.50 தாமத கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இது தற்போது ரூ.20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவற்றை நாங்கள் வரவேற்கிறோம்.
தமிழகத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டுவிட்டாலும், மத்திய அரசின் நடவடிக்கை களால் போராட்டம் தொடர்கிறது. நாங்கள் தற்போது ஐஆர்டிஏ அமைப்பை கலைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். காலாண்டு கணக்கில் ரூ.1,800 கோடி லாபம் சம்பாதிக்கும் காப்பீட்டு நிறுவ னங்கள், கட்டணத்தை உயர்த்தியது நியாய மில்லை என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.