

சென்னையில் ஆகாய நடைபாதைக்கான திட்ட அறிக்கை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரி கூறினார்.
சென்னையில் இந்த ஆண்டில் 2 இடங்களில் ஆகாய நடைபாதைகளை அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக மாநகராட்சி அறிவித்திருந்தது. அதன்படி மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் பேருந்து நிலையத்துக்கு நேரடியாக செல்லும் வகையில் 600 மீட்டர் நீளமுள்ள நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தி.நகரிலிருந்து செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் செல்லுவதால் மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வரும் பலர் தி.நகர் பேருந்து நிலையத்துக்கு வருகின்றனர். இவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்க லிஃப்ட் வசதியுடன் கூடிய ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதே போன்று கோட்டை ரயில் நிலையத்துக்கும் பாரிமுனைக்கும் இடையேயும் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளன.
இந்த திட்டத்துக்கான ஏலத்துக்கு முந்தைய கூட்டம் நவம்பர் 5ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 16ம் தேதி ஏலத்தில் பங்கேற்பவர்களை உறுதி செய்யும் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் விரிவான திட்ட அறிக்கை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என அந்த அதிகாரி கூறினார்.